மக்களவைக்கு தற்போது உடனடியாக தேர்தல் நடத்தினாலும் மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்று சமூக வளர்ச்சி ஆய்வு மையம் (சிஎஸ்டிஎஸ்) நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
2014 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 336 தொகுதிகள் கிடைத்தன. மொத்த முள்ள 543 தொகுதிகளில் பாஜக 282 இடங்களை கைப்பற்றி பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றது. பாஜக தலைமையில் ஆட்சி அமைந்து மே 26-ம் தேதியுடன் 3 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி பிரபல இந்தி செய்தி சேனல் ஒன்று நேற்று தேசிய அளவில் மக்களின் மனநிலை குறித்த கருத்துக்கணிப்பு வெளியிட்டது.
இந்த சேனலுக்காக டெல்லியில் உள்ள சிஎஸ்டிஎஸ் நாடு முழுவதிலும் பிராந்திய வாரியாக கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில், “மக்களவைக்கு தற்போது உடனடியாக தேர்தல் நடத்தினா லும் பாஜக தலைமையில் ஆட்சி அமையும். என்றாலும் கடந்த தேர்தலை விட தற்போது இக்கூட்டணிக்கு சில இடங்கள் குறைவாகவே கிடைக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் பாஜகவுக்கு மக்களிடம் செல்வாக்கு உயர்ந் துள்ளது. இதனால் தே.ஜ. கூட்டணி 331 தொகுதிகளில் வெற்றி பெறும்” என்று தெரியவந் துள்ளதாக சிஎஸ்டிஎஸ் கூறுகிறது.
“பணமதிப்பு நீக்க நடவடிக்கை பாஜகவின் செல்வாக்கை பாதிக்கவில்லை. பாதிக்கும் மேற் பட்டோர் இதற்கு ஆதரவாகவும் வெறும் 16 சதவீதம் பேர் மட்டுமே இது தேவையற்ற ஒன்று என்றும் கருதுகின்றனர். விவசாயிகளிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 49 பேர் தங்கள் பிரச்சினையில் மத்திய அரசின் நடவடிக்கை சரியல்ல என்று கூறியுள்ளனர்” என்றும் சிஎஸ்டிஎஸ் தெரிவிக்கிறது.
“எதிர்கட்சிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணிக்கு 104 தொகுதி கள் கிடைக்கும் (இக்கூட்டணிக்கு 2014 தேர்தலில் 60 தொகுதிகள் கிடைத்தன). இம்முறை 44 தொகுதிகள் கூடுதலாக கிடைப்பதற்கு பிஹாரில் லாலு பிரசாத், நிதிஷ்குமார் உடனான மெகா கூட்டணியும், தமிழகத்தில் அரசியல் மாற்றமும் காரணமாக இருக்கும். தே.ஜ. கூட்டணிக்கு கடந்தமுறை கிடைத்த அனைத்தும் இந்தமுறை கிடைக்காவிட்டாலும், புதிய தொகுதிகள் பல கிடைக்கும். இவை, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கிடைக்கும். தமிழகத்தில் அதிமுக வாக்குகள் திமுகவுக்கு சென்று ஐ.மு.கூட்டணியின் தொகுதிகள் அதிகரிக்கும்” என்றும் சிஎஸ்டிஎஸ் கூறுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் சிஎஸ்டிஎஸ் இயக்குநர் பேராசிரியர் சஞ்சய்குமார் கூறும்போது, “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவால் அக்கட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு வாக்குகள் திமுக பக்கம் செல்லத் தொடங்கியுள்ளன. இதனால் திமுகவுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும். தமிழகத்தில் மாநில கட்சிகள் வலுவாக இருப்பதால் பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்காது. என்றாலும் இங்கு அக்கட்சியின் செல்வாக்கு வளர்ந்துள்ளது” என்றார்.
இந்த கருத்துக்கணிப்பு கடந்த மே 1 முதல் 15 வரை நடத்தப்பட்டுள்ளது. 11,373 பேர் கலந்துகொண்ட கருத்துக் கணிப்பு மொத்தம் 147 தொகுதி களின் 583 பகுதிகளில் நடை பெற்றது. தமிழகத்தின் 11 மக்களவை தொகுதிகளிலும் நடத்தப்பட்டுள்ளது.