ஒடிசாவில் நடந்த தண்ணீர் தொட்டி திறப்பு விழாவின் போது ஆளும் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி. ஜெய பாண்டா மீது சிலர் முட்டை வீசினர்.
பிஜு ஜனதா தளத்துக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை குறித்து அவ்வப்போது அக்கட்சியின் எம்.பி.யான பாண்டா குரல் எழுப்பி வந்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த கட்சியின் தலைவரும், முதல்வருமான நவீன் பட்நாயக் அவரை செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கினார். இதனால் கட்சிக்குள்ளும் பாண்டாவுக்கு எதிரான அலை வீசத் தொடங்கியது.
இந்நிலையில் எம்.பி.க்களின் தொகுதி வளர்ச்சி நிதியை செலவழித்து கேந்திராபாரா மக்களுக்காக பாண்டா தண்ணீர் தொட்டி அமைத்தார். அதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது அங்கு திடீரென வந்த பிஜு ஜனதா தள எம்எல்ஏ பிரதாப் ஜெனாவின் ஆதரவாளர்கள், பாண்டா மீது முட்டை வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தண்ணீர் தொட்டி அமைப்பு பெயர் பலகையில் ஜெனாவின் பெயர் பொறிக்கப்படவில்லை என்றும், நிகழ்ச்சிக்கு அவரை அழைக்கவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.
இதை மறுத்துள்ள பாண்டா, ‘‘உள்ளூர் எம்எல்ஏவான ஜெனாவின் பெயரும், அதிகாரிகளின் பெயர்களும் கூட அதில் பொறிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி அவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது’’ என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.