சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆடிட்டர் ராஜேஷ் குமார் அகர்வாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லியில் நேற்று கைது செய்தனர்.
பின்னர் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரூபி அல்கா குப்தா முன்பு அவரை ஆஜர்படுத்தினர். அப்போது அகர்வாலை 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர். ஆனால் 3 நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ரூ.8 ஆயிரம் கோடி பண மோசடி தொடர்பான வழக்கை மத்திய அரசின் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் சுரேந்திர குமார் ஜெயின் மற்றும் வீரேந்திர ஜெயின் மேலும் 2 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதில் ஜெயின் சகோதரர்கள் கடந்த மார்ச் மாதம் கைது செய் யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக ராஜேஷ் குமார் அகர்வாலை கைது செய்துள் ளோம். போலி நிறுவனங்களைத் தொடங்கி அதன்மூலம் பண மோசடியில் ஈடுபட ஜெயின் சகோதரர்களுக்கு அகர்வால் உதவியதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும். மேலும் வேறு சில நிறுவனங்களுக்கும் இதுபோன்ற சேவையை செய் துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
லாலு மகளுக்கு உதவி
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான மிசா பாரதியுடன் தொடர்புடைய மிஷைல் பேக்கர்ஸ் அன்ட் பிரின்ட்டர்ஸ் நிறுவனத்துக்கும் ராஜேஷ் அகர்வால் உதவி செய் திருப்பதாக அமலாக்கத் துறை கருதுகிறது. இதுகுறித்தும் விசா ரணை நடத்தும் எனத் தெரிகிறது.
லாலு மற்று அவரது குடும் பத்தினர் ரூ.1,000 கோடி மதிப்பி லான நிலத்தை பினாமி பெயரில் வாங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர்களுக்கு சொந்தமான சுமார் 20 இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இந்நிலையில் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.
இதுகுறித்து பிஹார் மாநில பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி கூறும்போது, “பண மோசடி வழக்கில் கைதாகி உள்ள ஜெயின் சகோதரர்கள், இப்போது கைதான அகர்வால் மற்றும் லாலு மகள் ஆகியோரிடையே நெருங்கிய தொடர்பு உள்ளது” என்றார்.
லாலு மத்திய அமைச்சராக இருந்த போது, மிசா பாரதி டெல்லியின் பிஜ்வசன் பகுதியில் போலி நிறுவனம் தொடங்கி குறைந்த விலைக்கு பண்ணை இல்லம் வாங்கினார் என சுஷில் குமார் மோடிதான் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.