காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நீர் இருப்பை ஆய்வு செய்வதற்கு நிபுணர் குழுவை அமைக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் ஃபாலி நாரிமனின் ஆலோசனையின்படி செயல்பட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வர வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
முன்னதாக காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்தி, அதில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியின் உண்மை நிலவரத்தை ஆராய வேண்டும்.இதற்கு மத்திய அரசு கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுவை ஆகிய 4 மாநில அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட நிபுணர் குழு உருவாக்க வேண்டும் என வழிக்காட்டுதல் வழங்கியது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில் நிபுணர் குழு அமைப்பு தொடர்பாக 4 மாநில அரசுகளும் தங்களது கருத்தை தெரிவிக்குமாறு உத்தரவிட்டது. வரும் ஜூலை 11-ம் தேதி காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம் மீண்டும் கூடுகிறது. முன்னதாக மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டு, உச்சநீதிமன்றத்தில் அதனை தெரிவிக்க காவிரி காண்காணிப்புக் குழு முடிவெடுத்துள்ளது.
இதையடுத்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காவிரி வழக்கு தொடர்பாகவும், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாகவும் முதல்கட்டமாக விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டுவது தொடர்பாகவும், வறட்சிக் காலத்தில் இருப்பு நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரங்களில் கர்நாடக அரசு எடுக்கும் முடிவுக்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.
இறுதியாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள நீர் இருப்பை ஆய்வு செய்வதற்கு நிபுணர் குழுவை அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதற்கு பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர், '' நிபுணர் குழு அமைப்பது கர்நாடக அரசின் காவிரி நீர் உரிமையில் தலையிடுவது போன்றது. இந்தக் குழு அமைக்கப்பட்டால் காவிரி ஆற்றில் கர்நாடகாவுக்கு உள்ள உரிமை பறிப்போகும். மத்திய நிபுணர் குழு, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான அமைப்பாக மாறும். எனவே, இந்தக் குழுவை அமைக்க கர்நாடக அரசு அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களிடம் உரிய ஆலோசனை பெற்று, இறுதி முடிவை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தன.
இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா, நிபுணர் குழு அமைப்பது தொடர்பாக கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் ஃபாலி நாரிமனின் ஆலோசனையின்படி இறுதி முடிவு எடுக்கப்படும். இதற்காக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா ஆகியோர் சில தினங்களில் டெல்லி சென்று ஃபாலி நாரிமனிடம் ஆலோசனை நடத்துவார்கள். இந்த விவகாரத்தில் ஃபாலி நாரிமனின் அறிவுரையின் பேரில் கர்நாடக அரசு செயல்படும்” எனத் தெரிவித்தார்.