இந்தியா

இராக்கில் விடுவிக்கப்பட்ட இந்திய நர்ஸ்கள் சனிக்கிழமை கொச்சி வருகை

செய்திப்பிரிவு

இராக்கில் கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய நர்ஸ்கள் நாளை (சனிக்கிழமை) ஏர் இந்தியா விமானம் மூலம் கொச்சி விமானம் நிலையத்திற்கு வந்தடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இராக்கில் கிளர்ச்சிப்படையினரால் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் 46 பேரும் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் விடுவிக்கப்பட்டதாக வந்த தகவலை, வெளியுறவுத் துறை அமைச்சகமும், இராக்கில் உள்ள செஞ்சுலுவை சங்கமும் உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், நர்ஸ்கள் அனைவரையும் பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுத் துறை மேற்கொண்டுள்ளது.

டெல்லியில் இருந்து இராக்கின் குர்திஸ்தான் விமான நிலையத்திற்கு இன்று மாலை விரைந்த ஏர் இந்தியா விமானம், அங்கிருக்கும் நர்ஸ்களோடு உள்ளூர் நேரப்படி இன்று இரவு 8.20 மணிக்கு புறப்படும்.

இந்த விமானம் செவிலியர்களோடு சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் கொச்சி விமான நிலையம் வந்தடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், போர்ச் சூழலிலிருந்து மீண்டும் வரும் செவிலியர்களுக்கு உளவியல் ஆலோசனைகளும், மருத்துவ உதவிகளும், விமானத்திலேயே வழங்கவும், அங்கிருந்து பத்திரமாக அவர்களை மீட்டு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 1990-ம் ஆண்டு, குவைத் மீது இராக் படையெடுத்தபோது, அங்கு சிக்கியிருந்த லட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்களை மீட்டு, இந்தியாவுக்கு அழைத்து வந்தது உள்ளிட்ட பல்வேறு அவசர காலங்களில் சேவைபுரிவதில் ஏர் இந்தியா வல்லமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இராக்கில் இந்திய நர்ஸ்கள் விடுக்கப்படுவது தொடர்பான முந்தையச் செய்தித் தொகுப்பு:

கேரள முதல்வர் வெளியிட்ட தகவல்:

இராக்கில் கிளர்ச்சிப் படையினரால் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் 46 பேரும் விடுவிக்கப்பட்டதாக, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

மேலும், அவர்கள் அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்புவதற்காக எர்பில் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மோசுல் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் இருக்கிறது குர்திஸ்தான் தலைநகரான எர்பில். இராக்கில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையினர் போரில் ஈடுபட்டுள்ளனர். திக்ரித், மோசுல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கிளிர்ச்சியாளர்கள் பிடியில் சிக்கிக் கொண்டனர்.

இந்நிலையில், இராக்கின் திக்ரித் நகரில் இருந்து இந்திய செவிலியர்கள் 46 பேர் கடத்தப்பட்டு மோசுல் நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, டெல்லியில் முகாமிட்டார். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் பல்வேறுகட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்திய நர்ஸ்கள் அனைவரும் பத்திரமாக நாடு திரும்புவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, இராக்கில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த 46 நர்ஸ்களும் விடுவிக்கப்பட்ட தகவலை கேரள முதல்வர் உம்மன் சாண்டி வெளியிட்டார்.

SCROLL FOR NEXT