2010-ம் ஆண்டு கொல்கத்தா தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் அலட்சியத்தினால் இடுப்புக் கீழே உணர்வை இழந்த பெண்ணுக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு கொடுக்க தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிடுள்ளது.
இது குறித்து தபன் கர் என்பவர் புகார் கொடுத்தார். 2010-ம் ஆண்டு மனைவி கோபாவுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சையினை ஜெனித் சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனை மேற்கொண்டது. ஆண் குழந்தை பிறந்தது, இதில் சிக்கல் இல்லை.
ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மனைவி கோபாவின் இடுப்புக் கீழான பகுதிகளில் உணர்வு இல்லாமல் போய்விட்டது. அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஸ்பைனல் கார்டில் மயக்க மருந்து ஊசி போடப்பட்டது. ஆனால் மகப்பேறு முடிந்தவுடன் தன்னால் இடுப்புக் கீழே அசைக்க முடியவில்லை என்று கோபா கூறியுள்ளார். அதாவது சிறுநீர், மலம் கழிக்கும் போது தான் உணர்விழந்துள்ளது அவருக்கு தெரியவந்தது.
உடனே மருத்துவக் குழு எம்.ஆர்.ஐ. எடுக்க ஒரு சிறப்பு மையத்துக்கு அழைத்து சென்றனர். அதன் அறிக்கை 3 நாட்களுக்குப் பிறகு கிடைத்தது. இதனையடுத்து டிசம்பர் 23, 2010 வரை மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். பிறகு மற்றொரு நரம்பியல் மருத்துவமனைக்கு செல்லுமாறு சிபாரிசு செய்தனர். அங்கு இன்னொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பிறகு கோபா முழுதும் குணமடைய வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியதையடுத்து கணவர் புகார் அளித்தார்.
இந்நிலையில் வழக்கு பல்வேறு படிநிலைகளைத் தாண்டி தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிமன்றத்துக்கு வந்தது, இதில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி அஜித் பாரிஹோக், “மருத்துவ நடைமுறைகளின்படி எம்.ஆர்.ஐ ரிப்போர்ட் வந்தவுடனேயே அதன் மீதான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் நோயாளி டிஸ்சார்ஜ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதன் படி நோயாளிக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாமல் 4 நாட்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இது மிகவும் மோசமான் அலட்சியம், இதனால் பெண் ஒருவர் ஆயுள் முழுதும் முடக்கப்பட்டுள்ளார். எனவே புகார்தாரருக்கு மருத்துவமனை ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடுகிறேன்” என்று கூறினார்.
ஆனால் வழக்கம் போல் மருத்துவர்கள் அலட்சியம் என்ற குற்றச்சாட்டை மறுத்தனர். சரியாகவே அனஸ்தீஷியா கொடுத்தோம் என்று வாதிடுகிறது மருத்துவமனை.