இந்தியா

நிதியை முறையாக செலவிட்டால் வரி செலுத்த மக்கள் தயங்க மாட்டார்கள்: மோடி கருத்து

பிடிஐ

நிதி ஆயோக் உறுப்பினர்கள் மற்றும் பொருளாதார அறிஞர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, “இந்த ஆண்டுக்கான பொது பட்ஜெட் முன்னதாகவே தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனால் நிதியாண்டு தொடங்கும்போது, செலவுக்கான நிதி கிடைக்கப் பெறும். முந்தைய ஆண்டுகளில் பருவ மழைக் காலத்தின் தொடக்கத்தில் தான் செலவுக்கான நிதி கிடைக்கப்பெறும். இதனால் பருவ காலத்தின் தொடக்க மாதங்களில் அரசுத் திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். தற்போது இந்தக் குறைபாடு நீக்கும். நேரடி வரிகளுக்கான மத்திய வாரியமும் உற்பத்தி மற்றும் கலால் வரிக்கான மத்திய வாரியமும் தங்கள் புள்ளிவிவரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும். வரி வருவாயை அரசு முறையாக பயன்படுத்தினால் மக்கள் வரி செலுத்த தயங்க மாட்டார்கள்” என்றார்.

இந்தக் கூட்டம் தொடர்பாக நிதி ஆயோக் துணைத் தலைவர் பனகாரியா கூறும்போது, “பட்ஜெட் தயாரிப்பு பணிக்காக, வேலைவாய்ப்பு உருவாக்குதல், வேளாண்மை, திறன் மேம்பாடு, கல்வி, வரிவிதிப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் குறித்து பொருளாதார நிபுணர்களின் கருத்துகளை பிரதமரும் நிதி அமைச்சரும் கேட்டறிந்தனர்” என்றார்.

SCROLL FOR NEXT