இந்தியா

ஐ.நா.வில் மசூதை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும்: இந்தியாவின் பரிந்துரையை தடுத்தது சீனா

செய்திப்பிரிவு

பாகிஸ்தானைச் சேர்ந்த மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பரிந்துரைத்தது. இதனை சீனா தனது வீட்டோ அதிகாரத்தால் மீண்டும் தடுத்துவிட்டது.

கடந்த ஜனவரியில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படைத் தளம் மீது பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அந்த அமைப்பின் தலைவர் மசூர் அசார் மீது தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவும் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி இந்திய தரப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 2 முறை பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் சீனா தனது வீட்டோ அதிகாரத்தால் இதனை தடுத்துவிட்டது.

இந்நிலையில் இந்திய தரப்பில் அதே பரிந்துரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று மீண்டும் கொண்டு வரப்பட்டது. இந்த முறை யும் சீனா தனது வீட்டோ அதிகாரத் தால் இந்தியாவின் பரிந்துரையை தடுத்துவிட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தமுள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்துள்ளன. ஆனால் சீனா மட்டும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

இதுதொடர்பாக இந்திய வெளி யுறவுத் துறை செய்தித் தொடர்பா ளர் விகாஷ் ஸ்வரூப் கூறியதாவது: மசூத் அசார் விவகாரம் தொடர்பாக சீனாவிடம் கடும் ஆட்சேபம் தெரி விக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத் துக்கு எதிரான போரில் சீனா இரட்டை வேடம் போடுகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை சீனா புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மசூத் அசார் யார்?

கடந்த 1999 டிசம்பர் 24-ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி ஆப்கானிஸ் தானின் காந்தஹாருக்கு கொண்டு சென்றனர். அப்போது விமானத்தில் இருந்த 178 பயணிகளை விடுவிக்க இந்திய சிறைகளில் இருந்த மசூத் அசார், முஷ்டாக் அகமது ஜர்கார், அகமது உமர் சையது ஷேக் ஆகிய 3 தீவிரவாதிகளை விடுவிக்க நிபந்தனை விதிக்கப்பட்டது.

வேறு வழியின்றி 3 தீவிரவாதிகளையும் மத்திய அரசு விடுதலை செய்து பயணிகளை பத்திரமாக மீட்டது. ஒரு பயணி மட்டும் தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தார்.

அவர் தொடங்கிய ஜெய்ஷ் இ-முகமது அமைப்பை ஐ.நா. சபை ஏற்கெனவே தீவிரவாத அமைப்பாக அறிவித்துவிட்டது. ஆனால் அதன் தலைவராக இருந்த மசூத் அசார் பாகிஸ்தான் அரசின் ஆதரவால் தண்டனையில் இருந்து தப்பி வருகிறார்.

SCROLL FOR NEXT