இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கு சுப்பிரமணியன் சுவாமி மனு தள்ளுபடி

ஐஏஎன்எஸ்

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தப் பத்திரிகை நஷ்டத்தில் இயங்கியதால் அதன் கடன் சுமை அதிகரித்ததாக கூறப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி இருவரும் கட்சிப் பணத்தை கொடுத்து கடனை சரிகட்டியதாகவும், அதற்கு ஈடாக நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான ‘அசோசியேடட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் ரூ.90.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை தங்களது ‘யங் இந்தியா’ நிறுவனம் மூலம் இருவரும் சதிச் செய்து கையகப்படுத்தியதாகவும் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார் தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பித்ரோடா ஆகியோருக்கு எதிராகவும் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 12-ம் தேதி இவ்வழக்கை விசாரித்தது. அப்போது நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை தாக்கல் செய்யும்படி நிதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. எதிர் தரப்புக்கு உரிய அவகாசம் வழங்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சுப்பிரமணியன் சுவாமி, விசாரணை நீதிமன்றத்தில், இதே மனுவை மீண்டும் தாக்கல் செய்யும்படி தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் டெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி லவ்லீன், காங்கிரஸ் கட்சியின் 2010-2011 நிதியாண்டு கணக்கு மற்றும் ஆசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பிற ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்ற சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கையை நிரா கரித்தார். அத்துடன் இவ்வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT