சுற்றுலாப் பயணிகளுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “நம் நாட்டில் மட்டுமல்ல உலகில் சுற்றுலாப் பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக ஜம்மு காஷ்மீர் உள்ளது. சுற்றுலாப் பயணிகள், மாநிலத்தின் எந்தப் பகுதியிலும், இரவிலும் கூட அச்சமின்றி சென்றுவரலாம். எவ்வித அசம்பாவிதமும் நேராது. நாட்டின் பிற பகுதிகளில் பெண்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அத்தகைய சிரமங்களை பெண்கள் எதிர்கொள்ள எனது அரசு அனுமதிக்காது. காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற மிகச் சிறந்த பருவநிலை தற்போது நிலவுகிறது. பல்வேறு சலுகைகள் அளிக்கவும் தயாராக உள்ளோம்.
நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்துடன் காஷ்மீர் வருமாறு அழைக்கிறேன்” என்றார். “இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள் காஷ்மீர் வரவிரும்பினால் அவர் களை வரவேற்கிறோம்” என்று பிரிவினைவாதிகள் நேற்று முன்தினம் அறிவித்தனர்.
இந்நிலையில் மெகபூபா நேற்று இந்த அழைப்பை விடுத்துள்ளார். காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் வெடித்த போராட்டத்தை தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.