தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு, அடைக்கலம், பயிற்சி, நிதியுதவி அளிக்கும் நாட்டை (பாகிஸ்தான்) கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஆப்கானிஸ்தானில் அமை தியை நிலைநாட்டுவதற்காக 2011 முதல் ஆண்டுதோறும் ‘ஆசியாவின் இதயம்’ மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. 6-வது மாநாடு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பேசியதாவது:
ஆப்கானிஸ்தானின் அமைதி, வளர்ச்சி, ஸ்திரத்தன்மைக்கு தீவிர வாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அந்த நாட்டின் அமைதி முயற்சிகளுக்கு உலக நாடுகளின் ஆதரவு தேவை.
தீவிரவாதத்துக்கு எதிராக நட வடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு, அடைக்கலம், பயிற்சி, நிதியுதவி அளிப்பவர்களையும் (பாகிஸ்தான்) கடுமையாக தண்டிக்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தீவிரவாதிகளைத் தடுக்காவிட்டால் அவர்களும் அவர்களை ஆட்டுவிப் பவர்களும் மேன்மேலும் வளர்ந்து நாச வேலைகளில் ஈடுபடத் தொடங்கி விடுவார்கள்.
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா அனைத்து வகை களிலும் உதவி செய்யும். இந்தியாவின் சார்பில் காபூலில் நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அணை, நெடுஞ்சாலைகள் அமைத்து தரப்பட்டுள்ளது.
இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் கூட்டு முயற்சியில் சாபஹர் துறைமுகத் திட்டத்தைச் செயல் படுத்த வேண்டும். இவற்றின் மூலம் ஆப்கானிஸ்தானின் பொரு ளாதாரம் வளர்ச்சி அடையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பேசியபோது, அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) இருந்து ஆப்கானிஸ்தானுக்கு தீவிரவாதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எங்கள் நாட்டில் நாசவேலைகளில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு அண்டைநாடு புகலிடம் அளிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் கள் ஆட்சி நடைபெற்றபோது அந்த அரசுக்கு பாகிஸ்தானும் சவுதி அரேபியும் மட்டுமே அங்கீகாரம் அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த மாநாட்டில் பாகிஸ்தான் அரசு தரப்பில் அந்த நாட்டு பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் பங்கேற்றார். மாநாட்டின்போது அவரை பிரதமர் நரேந்திர மோடி கைகுலுக்கி வரவேற்றார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்வை பாகிஸ்தான் ஊடகங்கள் புகழ்ந்து பாராட்டியுள்ளன.
உணவு பரிமாறிய மோடி
அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் பிரதமர் மோடியும் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனியும் நேற்று முன்தினம் வழிபாடு நடத்தினர். அங்கு பக்தர்களுக்கு மோடி உணவு பரிமாறினார். பிரதமர்கள் பலரும் பொற்கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளனர். எனினும் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய முதல் பிரதமர் மோடி என்று கோயில் நிர்வாகத்தினர் புகழாரம் சூட்டினர்.