தேசிய போர் நினைவிடம் விரைவில் அமைக்கப்படும் எனவும், இதற்கான இடம் விரைவில் தேர்வு செய்யப்படும் என்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
15-வது கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லி இந்தியா கேட்டில் உள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொண்டு, மலர் வளையம் வைத்து கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கூறும்போது, " விரைவில் தேசிய போர் நினைவிடம் அமைக்கப்படும். கார்கில் போரில் நாட்டுக்காக உயிரிழந்த வீரர்களின் பெயர் குறிப்புகளை, போர் நினைவு இடத்தில் பதிவு செய்வது அவசியமானதாகும்.
ஆனால் இதற்காக பணிகள் நடக்க சில காலமாகும், ஏனென்றால் இதனை மிக பிரம்மாண்டமாக அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான சரியான விசாலமான இடமும் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்திய ராணுவம் பலம் வாய்ந்தது. எந்த சவாலையும் சந்திக்கும் திறன் கொண்டது. ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதி இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டு உள்ளது என்றார்.
அதே போல, டெல்லியில், போர் அருங்காட்சியகம் மற்றும் பூங்கா ஒன்றும் அமைக்கப்படும். இதற்காக ரூ.100 கோடி நிரணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் படைகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளன. ராணுவ தளவாடங்களை வழங்குவதற்காக, மற்ற செலவினங்களை குறைத்து பாதுகாப்புத் துறை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன" என்றார்.
கார்கில் நினைவு விழா நிகழ்ச்சியில், முப்படைகளின் தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.