மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரங்கல் தெரிவித்த பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு காலமானார்.
இந்நிலையில் நேற்று காலையில் மாநிலங்களவை கூடியதும், முன்னாள் உறுப்பினரான (1984-89) ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி விடுத்த இரங்கல் செய்தியில், “ஜெயலலிதா மறைந்ததன் மூலம் முக்கிய தலை வரை, சிறந்த நாடாளுமன்ற வாதியை, சிறந்த நிர்வாகியை நாடு இழந்து விட்டது. ஆனாலும் பின் தங்கிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்கு நீண்டகாலத்துக்கு நிலைத்து நிற்கும்.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி திரைப் படங்களில் நடித்த அவர் அனை வரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரது மறைவுக்கு இந்த அவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது” என்றார்.
பின்னர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக் கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மக்களவையில்…
மக்களவை நேற்று காலையில் கூடியதும், உறுப்பினர்கள் எழுந்து நின்று ஜெயலலிதாவின் மறைவுக்கு சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறும்போது, “மிகவும் பிரபலமான, தைரியமான, திறமையான ஒரு தலைவரை நாடு இழந்துவிட்டது. பொது மக்கள் மத்தி யில் உண்மையான தலைவராக விளங்கிய அவரை கட்சித் தொண் டர்கள் அன்புடன் அம்மா என்றும் புரட்சித்தலைவி என்றும் அழைத் தனர்” என்றார்.
இதையடுத்து, சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், மத்தியப் பிரதேச மாநிலம் ஷதோல் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற கியான் சிங் நேற்று பதவியேற்றுக் கொண் டார். பின்னர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
ஒரு நாள் துக்கம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதையடுத்து மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. மேலும் அவருக்கு அஞ்சலி செலுத் தும் வகையில் டெல்லி உட்பட அனைத்து மாநில தலைநகரங்களி லும் நேற்று ஒரு நாள் மட்டும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.