பழைய 500, 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என அறிவித்துள்ள நிலையில் கறுப்புப் பண புழக்கத்தை முடக்க வருமான வரித்துறை நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
கடந்த ஒரு மாதமாக கர்நாட காவில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் ரூ.175 கோடிக்கும் அதிகமான புதிய ரூபாய் நோட்டு கள், 100 கிலோவுக்கும் அதிகமான தங்கக் கட்டிகள் சிக்கின.
இந்நிலையில் பெங்களூரு யஷ்வந்த்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தச் சென்றனர். அந்த வீட்டில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி 2 நாய்களுடன் வசித்து வந்தார்.
வீடு முழுவதும் சோதனை நடத்தியபோது அமைதியாக இருந்த மூதாட்டி, பூட்டிக் கிடந்த ஒரு படுக்கையறையை திறக்க மறுத்தார். மேலும் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் அதிகாரிகள் அந்த அறையை திறக்க முயற்சித்த போது, ஆத்திரம் அடைந்த மூதாட்டி அதிகாரிகள் மீது நாய்களை ஏவி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் சிரமப்பட்டு நாய்களைச் சமாளித்து அந்த அறையை திறந்தனர்.
அப்போது அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.25 கோடி மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், ரூ.64 லட்சம் மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளும் சிக்கின.
இதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வீடு பெங்களூருவில் உள்ள பிரபல கிளப் நிர்வாகிக்கு சொந்தமானது என்பதும், கறுப்புப் பணத்துக்கு காவலாக மூதாட்டியை நியமித்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வருமான வரித்துறை சம்பந்தப்பட்ட கிளப் நிர்வாகிக்கு சம்மன் அனுப்பி, விளக்கம் கோரியுள்ளனர்.