புதுடெல்லி: நமது அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பு என்பது துருவநட்சத்திரம் போன்றது. அது, சட்டத்திற்கு விளக்கம் அளிப்பவர்களுக்கும் (interpreters) அதனை நடைமுறைப்படுத்துபவர்களுக்கும் பாதையில் தடங்கள் ஏற்படும்போது வழிகாட்டி, சரியான திசைகளைக் காட்டுகிறது என்று தலைமை நீதிபதி டிஓய் சந்திரசூட் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் சனிக்கிழமை நானி பல்கிவாலா நினைவு சொற்பொழிவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், "நமது அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பு என்பது துருவநட்சத்திரம் போன்றது. அது, சட்டத்திற்கு விளக்கம் அளிப்பவர்களுக்கும் (interpreters) அதனை நடைமுறைப்படுத்துபவர்களுக்கும் பாதையில் இடையூறு ஏற்படும்போது வழிகாட்டி, சரியான திசைகளைக் காட்டுகிறது.
நமது அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பு அல்லது தத்துவம் என்பது, அரசியலமைப்பின் மேலாதிக்கம், சட்டத்தின் ஆட்சி, அதிகாரப்பகிர்வு, நீதி விசாரணை, மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சுதந்திரம், தனிமனித ஒழுக்கம், வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டது.
நானி பல்கிவாலா போன்ற தலைசிறந்த நீதியரசர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவை. அவர் எங்களிடம், நமது அரசியலமைப்பு தனித்த அடையாளத்தைக் கொண்டுள்ளது அதனை எப்போதும் மாற்ற முடியாது. மற்ற அதிகார வரம்புகள், இதுபோன்ற பிரச்சினையை எவ்வாறு கையாளுகிறது என்பதை கவனிப்பது நீதிபதிகளுக்கு நன்மை பயக்கும் என்பது அடிப்படை கட்டமைப்பு காட்டுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியல் அமைப்பின் அடையாளம், அதனுடன் இந்தியாவின் குடிமக்கள் கொள்ளும் தொடர்பில் இருந்து தொடங்குகிறது. நீதித்துறையின் விளக்கத்துடன் இணைந்துள்ளது. ஒருநீதிபதியின் திறமை என்பது அரசியல் அமைப்பின் ஆன்மாவை சிதைக்காமல், மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அதற்கு விளக்கம் அளிப்பதில் தான் இருக்கிறது.
சமீப காலங்களில், இந்திய சட்டத்தின் எல்லைகள், நெரிக்கும் நெறிமுறைகளை நீக்குவதற்கும், நுகர்வோர் நலனை மேம்படுத்துவதற்கும், வணிகப் பரிவர்த்தனைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நியாயமான சந்தைப்போட்டியை ஊக்குவிப்பதற்காக, போட்டி சட்டம், திவால் குறியீடு போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதேபோல், இந்தியாவில் பொருள்கள் விற்பனையில் உள்ள மறைமுக வரியை களைவதற்காக ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டுள்ளது.
நமது அரசியல் அமைப்பை பார்த்தீர்கள் என்றால் அது வரம்புகளற்ற பொருளாதார தாராளமயமாக்களுக்கு ஆதரவாக இல்லை என்பது தெரியும். அதே நேரத்தில் அரசியலமைப்பு ஒரு சரியான சமநிலையை கண்டடைய முயற்சி செய்கிறது. சமூகத்தின் தேவைக்கு ஏற்ப அரசு தனது சட்டம் மற்றும் பொருளாதார கொள்கைகளை வகுக்கவும் உருவாக்கவும் அனுமதி அளிக்கிறது.
தனிமனிதன் தனது சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்கும், அதன் முயற்சிகளுக்கு தடையில்லாமல் பலன்களைப் பெறும்போதும் பொருளாதார நீதி என்பது வாழ்வின் பல்வேறு அங்கங்களில் ஒன்றாக மாறிவிடும்.
ஒரு தொலைப்பேசியை வாங்குவதற்காக நீண்ட காலம் கத்திருந்த நிலையில் இருந்து நாம் வெகுதூரம் தாண்டி வந்து விட்டோம். மூலதனச்சிக்கல் நம்மைக் கட்டுப்படுத்திய காலத்தை நாம் கடந்து வெகுதூரம் வந்துவிட்டோம். என்றாலும், உள்ளூர் சூழலால் கட்டுப்படுத்தப்படும் சட்ட கலாச்சாரம் குழப்பமானதாக இருக்கக்கூடாது. சட்டம் என்பது எப்போதும் சமூக யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது" இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, ஜன.13ம் தேதி ஜெய்பூரில் நடந்த அகில இந்திய சட்டம் இயற்றும் அவைகளின் தலைவர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், "நீதித்துறை சட்டமிற்றுவதில் தலையிட முடியாது" என்று தெரிவித்திருந்தார். இதற்காக, கடந்த 1973ம் ஆண்டு கேசவனந்த பாரதியின் வழக்கை மேற்கோள்காட்டியிருந்தார். "அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தான் உடன்படவில்லை. அது ஒரு மோசமான முன்னுதாரணம். 1973ம் ஆண்டு கேசவானந்தா பாரதி வழக்கில், உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் அரசியல் அமைப்பைத்திருத்தலாம், ஆனால் அதன் அடிப்படை கட்டமைப்பை மாற்றமுடியாது என்று யோசனை வழங்கியிருந்தது. நீதிமன்றத்தினை மதிக்கும் அதே வேலையில், இந்த தீர்ப்பிற்கு நான் உடன்படவில்லை'' என்று தெரிவித்திருந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிப்பதில் தற்போது நடைமுறையில் இருக்கும் கொலீஜியம் முறையை மத்திய அரசு கேள்விக்குட்படுத்திருவரும் நிலையில் அதனை பாதுகாக்கும் முயற்சியில் உச்ச நீதிமன்றம் செயல்படுகிறது. இந்த பின்னணியில் குடியரசு தலைவரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இவ்வாறு பேசி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.