இந்தியா

பொருளை விளம்பரப்படுத்தினால் காரணம் சொல்ல வேண்டும் - சமூக ஊடக பிரபலங்களுக்கு கட்டுப்பாடு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சமூக ஊடகங்கள் வழியாக பொருட்களை புரமோட் செய்வது அதிகரித்து வரும் நிலையில், மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது.

அதன்படி, பிரபலங்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்குடன் இருப்பவர்கள் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை புரமோட் செய்தால், அதற்கு கைமாறாக, பரிசு பொருட்கள், நிறுவனத்தில் பங்கு, இலவச பயணங்கள் என தாங்கள் பெறும் சலுகைகளை விளம்பர வீடியோவில் குறிப்பிட வேண்டும். தவறும்பட்சத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தும் எளிதில் புரியக்கூடிய தெளிவான மொழியில் இருக்க வேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விடாமல், பார்வை யாளர்கள் நிதானமாக படித்து தெரிந்து கொள்ளும் வகையில் நீண்ட நேரம் காட்டப்பட வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இது குறித்து மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் செயலர் ரோஹித் குமார் கூறு கையில், “நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் நோக்கிலும், தவறான விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் புதிய நெறிமுறைகளைக் கொண்டு வந்துள்ளோம். நேரலை வீடியோவாக இருந்தால், அந்த வீடியோ முழுமைக்கும் அந்த விவரங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். எனவே, சமூக ஊடகங்களில் புரமோட் செய்பவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT