டெல்லி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த நஜீப் ஜங் வெள்ளிக்கிழமையன்று பிரதமர் மோடியைச் சந்தித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்ததாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நெருக்கடி அதிகரித்ததனாலேயே இவர் ராஜினாமா செய்ததாக எழுந்த செய்திகளை மறுத்த நஜீப் ஜங், “முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நான் இப்பதவியில் நியமிக்கப்பட்டதால் ஆட்சி மாறிய தொடக்கத்திலிருந்தே என்னை விடுவிக்குமாறு கோரியிருந்தேன், ஆனால் பிரதமர் என்னை தொடரும்படி கேட்டுக் கொண்டார்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு நான் மீண்டும் என்னை விடுவிக்கும்படி கோரினேன் அப்போதும் பிரதமர் என்னைத் தொடரும்படி கேட்டுக் கொண்டார். மீண்டும் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாயன்று பிரதமரிடம் சொந்தக் காரணங்களினால் விலகுகிறேன் என்று கூறினேன்” என்றார்.
அவர் ஒரு புத்தகம் எழுதும் ஆசை உள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் காலை உணவு அருந்திய நஜீப் ஜங் 2 ஆண்டுகாலம் இணைந்து பணியாற்றியது குறித்து நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
திடீர் ராஜினாமாவை அடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அவரை காலை உணவு விருந்துக்காக அழைத்துள்ளார். ஜங் ஏன் ராஜினாமா செய்தார் என்ற கேள்விக்கு கேஜ்ரிவால், “சொந்தக் காரணங்களினால் ராஜினாமா செய்தார்” என்றார்.
அரசியல்ரீதியாக மோடிக்கு நெருக்கமானவர் என்ற காரணத்தினாலும் இடையூறு செய்ததாக கேஜ்ரிவால் குற்றம்சாட்டியதாலும் இருவரிடையே மனக்கசப்பு இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இருவரும் சுமுக உறவுகளையே வைத்திருந்ததாக தெரிகிறது.
மணீஷ் சிசோடியா கூறும்போது, “கடந்த 2 ஆண்டுகள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். கடந்த ஓராண்டாகவே ராஜினாமா செய்யும் முடிவு தன்னிடம் இருந்ததாக அவர் கூறினார். குடும்பத்துடன் நேரம் செலவிடவும், எழுத்து, கல்விப்புலம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட நாட்டமுள்ளதாக அவர் தெரிவித்தார். சிக்குன்குனியா நோய்ப்பரவல் காரணமாக அவர் ராஜினாமா செய்வதாக தெரிவிக்கவில்லை” என்றார்.