பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, முதல்முறையாக சம்பள நாளை வங்கிகள் இன்று எதிர் கொள்கின்றன. சம்பளப் பணம் எடுக்க அனைத்து தரப்பு மக்களும் வங்கிகளில் குவிய வாய்ப்புள்ளது. ஏற்கெனவே பல ஏடிஎம்கள், வங்கி களில் பணம் இல்லாமல் மக்கள் திண்டாடிய நிலையில், சம்பள நாட்களில் பணத்தை எடுப்பதற்கு வெகுவாக சிரமப்பட வேண்டியி ருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த சூழலில், தெலங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் முதல்வர் கே.சந்திர சேகர ராவிடம் 2 நாட்களுக்கு முன்பு கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர். அந்த மனுவில், அரசு ஊழியர்களுக்கு அலுவலகத்தில் பல வேலைகள் உள்ளதால், ஏடிஎம் மையங்கள் முன் நீண்ட வரிசையில் காத்திருக்க இயலாது.
எனவே, அவரவரின் ஊதியத் தொகையில் இருந்து ரூ.10 ஆயிரத்தை ரொக்க பணமாக நேரடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்ற முதல்வர் சந்திரசேகர ராவ், ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பி அனுமதி கோரினார்.
ஆனால் இதற்கு அனுமதி தர ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. தெலங்கானா அரசு மாதந்தோறும் ரூ.3000 கோடி வரை ஊழியர் களுக்கு ஊதியம், ரூ.1,500 கோடி ஓய்வூதியம் என மொத்தம் ரூ.4,500 கோடி சம்பளமாக வழங்க வேண்டி உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் தர ரிசர்வ் வங்கி மறுத்து விட்டதால், மற்றவர்களுடன் சேர்ந்து அவர்களும் இன்று முதல் ஏடிஎம் மையங்களின் முன்பாக காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவிலும் இதே கோரிக் கையை அரசு ஊழியர்கள் முன் வைத்தனர். ஆனால், முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.