இந்தியா

பிஹாரிலிருந்து குவைஹட்டி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 2 பயணிகள் பலி; 10 பேர் காயம்: ஓட்டுநர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

பிடிஐ

பிஹாரில் இருந்து குவாஹட்டி சென்ற கேபிடல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 2 பேர் பலியாகினர். விபத்துக்கு காரணமான ஓட்டுநர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பிஹாரின் ராஜேந்திர நகர் நிலையத்தில் இருந்து, அசாம் மாநிலம் குவஹாத்தி நோக்கி புறப்பட்ட கேபிடல் எக்ஸ்பிரஸ் ரயில், மேற்குவங்க மாநிலம், அலிப்பூர்துவார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.

அலிப்பூர்துவார் ரயில்வே மண்டல தலைமையகத்தில் இருந்து 32 கிமீ தொலைவில் உள்ள சமுக்தலா ரோடு ரயில் நிலையத்தின் அருகே செவ்வாய் இரவு 9 மணிக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாயின. தடம் புரண்ட பெட்டிகளில் இருந்து 2 சடலங்களும் மீட்கப்பட்டன. பலியான இருவரும் சாதுக்களாக இருக்கக்கூடும் என, ரயில்வே செய்தித் தொடர்பாளர் பிரனவ் ஜோதி சர்மா தெரிவித்தார்.

ரயிலின் ஓட்டுநர் சிக்னலை மீறி ரயிலை இயக்கியதே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ரயிலின் ஓட்டுநர், உதவி ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மண்டல ரயில்வே மேலாளர் சஞ்சீவ் கிஷோர் தெரிவித்தார்.

நடுவழியில் தத்தளித்த பயணி கள் காமாக்யா-அலிபூர்துவார் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் அலிப்பூர்துவார் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு, அவரவர் ஊர்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT