அணு ஆயுதங்களை சுமந்தபடி கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப் பட்டது. ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் இருந்து இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் (டிஆர்டிஓ) அதிநவீன ஏவுகணைகளை உரு வாக்கி வருகிறது. ஏற்கெனவே இந்தியாவிடம் பிருத்வி, தனுஷ் மற்றும் 4 வகை அக்னி ஏவுகணைகள் உள்ளன. அதில் அக்னி-1 ஏவுகணை 700 கி.மீ., அக்னி-2 ஏவுகணை 2,000 கி.மீ., அக்னி-3 ஏவுகணை 2,500 கி.மீ., அக்னி 4 ஏவுகணை 3,500 கி.மீ. தூரத்துக்கும் சென்று தாக்கும் திறன் படைத்தவை.
அந்த வரிசையில் டிஆர்டிஓ அக்னி-5 ஏவுகணையை உரு வாக்கியுள்ளது. இந்த ஏவுகணை முதல் முதலாக கடந்த 2012-ம் ஆண்டிலும், தொடர்ந்து 2013, 2015-ம் ஆண்டிலும் சோதித்து பார்க்கப்பட்டது. இந்நிலையில் 4-வது முறையாக அக்னி-5 ஏவுகணை நேற்று ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட சோதனை மையத்தின் நகரும் ஏவுதளத்தில் இருந்தபடி சோதித்துபார்க்கப் பட்டது. 17 மீட்டர் நீளமும், 50 டன் எடையும் கொண்ட இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் படைத்தது. இந்தியாவின் கிழக்கே சீனா வரை சுமார் 5,000 கி.மீ தூரத்தில் உள்ள எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் வரிசையில்..
இந்த ஏவுகணையில் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அதி துல்லிய வழிகாட்டுதல் முறை கள், நுண்ணிய வழிகாட்டுதல் முறைகள் இந்த ஏவுகணையில் புகுத்தப்பட்டுள்ளன.
இந்த ஏவுகணையை ராணுவ வாகனத்தில் எங்கு வேண்டுமென்றாலும் எளிதாக எடுத்துச் சென்று, அங்கி ருந்தபடி தாக்குதல் நடத்த முடியும். 5,000 கி.மீ தூரம் வரை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன. அக்னி-5 ஏவுகணை சோதனையின் வெற்றி மூலம் தற்போது அந்நாடு களின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
பிரணாப், மோடி வாழ்த்து
இதற்கிடையே, ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதற்கு குடிய ரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டிஆர்டிஓவுக்கு வாழ்த்து தெரி வித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘அக்னி-5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்த டிஆர்டிஓவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி நமது ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.
‘‘டிஆர்டிஓ விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. அக்னி-5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி மக்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்துவிட்டனர்’’ என பிரதமர் நரேந்திர மோடியும் புகழாரம் சூட்டினார்.