வாரணாசி: உலகின் நீளமான நீர்வழித்தட பயணம் மேற்கொள்ளும் எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பலை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (ஜன.13) காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இத்துனுடன் ரூ.1000 கோடி மதிப்பிலான பல்வேறு உள்நாட்டு நீர்வழித்தட திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
பிரதமரின் தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசியில் இருந்து எம்வி கங்கா விலாஸ் என்ற சொகுசு கப்பல் தனது முதல் பயணத்தை இன்று தொடங்கியது. இதனை பிரதமர் மோடி காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பல் வாரணாசியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி வங்கதேசம் வழியாக 5 மாநிலங்களைக் கடந்து 51 நாட்களில் 3,200 கிமீ பயணம் மேற்கொண்டு அசாமில் இருக்கும் திப்ருகர் துறைமுகத்தை அடைகிறது.
சுற்றுலாவின் புதிய யுகம்: இந்தநிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கூறியதாவது: உலகின் நீளமான நீர்வழிப்பயணத்தை கங்கை நதியில் தொடங்கி வைப்பது மிகவும் முக்கியமான தருணமாகும். இந்தத் திட்டம் இது இந்திய சுற்றுலாவின் புதிய யுகத்திற்கு அடிகோலும்.
சொகுசு கப்பலான கங்கா விலாஸில் இருக்கும் பயணிகளுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில் நீங்கள் நினைக்கும் அனைத்தும் உள்ளது. உங்கள் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் இங்கு உண்டு. இந்தியாவை வார்த்தைகளில் வர்ணிக்கவோ வரையறுத்துவிடவோ முடியாது. அதனை இதயத்தினால் மட்டுமே உணர்ந்து அனுபவிக்க முடியும். ஏனெனில் இந்தியா, நாடு, மதம் அனைத்து எல்லைகளைக் கடந்து எல்லாருக்காகவும் தனது இதயத்தைத் திறந்து வைத்துள்ளது" என்றார். எம்வி கங்கா விலாஸின் இந்த முதல் பயணத்தில், அதன் முழு பயண தூரத்திற்கும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த 32 பயணிகள் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
51 நாட்களில் 50 சுற்றுலா தளங்கள்: எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பலின் பயணம் குறித்த அறிக்கையில்," நாட்டின் சிறந்தவற்றை உலகிற்கு காட்டும் வகையில் எம்வி கங்கா விலாஸின் பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் 51 நாட்களில், உலக பாரம்பரியமான இடங்கள், தேசிய பூங்காக்கள், நதி படுகைகள் பிஹாரின் பாட்னா, ஜார்கண்டின் சாஹிப்கஞ்ச், மேற்குவங்கத்தின் கொல்கத்தா, வங்கதேசத்தின் டாக்கா மற்றும் அசாமின் குவாஹாட்டி போன்ற முக்கிய நகரங்கள் என 50 சுற்றுலாத்தலங்களை காணமுடியும்.
இந்த பயணம் சுற்றுலா பயணிகளுக்கு, இந்தியா மற்றும் வங்கதேசத்தின் கலை, கலாச்சாரம், வரலாறு மற்றும் ஆன்மிகத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பினை அளிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.