இந்தியா

ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசிக்கு சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை: திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்

செய்திப்பிரிவு

ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, துவாதசிக்கு சாதாரண பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் நேற்று தெரிவித்தார்.

திருமலை-திருப்பதி தேவஸ் தான தலைமை நிர்வாக அதி காரி சாம்பசிவ ராவ், நேற்று காலையில் திருப்பதி அலிபிரி மலையடிவாரத்தில் இருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினார். அப்போது வழியில் உள்ள கடைகளில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா? நடைபாதையின் சுகாதாரம் ஆகியவை குறித்து பக்தர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் அங்கு செய்தி யாளர்களிடம் கூறும்போது, “வரும் ஆங்கில புத்தாண்டுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசிப்பார்கள். இதில் விஐபி பக்தர்களும் அடங்குவர். ஆனால் நேரடியாக வரும் விஐபி பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது.

இதேபோல, ஜனவரி 8-ம் தேதி வைகுண்ட ஏகாதசி, மறுநாள் 9-ம் தேதி துவாதசியையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. இந்த இரு நாட்களிலும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, துவாதசிக்கு சாதாரண பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT