இந்தியா

பெங்களூருவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

'வார்தா' புயல் சென்னை அருகே கரையைக் கடந்துவிட்டாலும் அதன் தாக்கத்தால் பெங்களூருவில் இன்னும் இரண்டு நாட்களுக்கு பலத்த காற்றும், மழையும் இருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

'வார்தா' புயலின் தாக்கத்தால் பெங்களூருவில் திங்கள் கிழமை இடி, மின்னல் மற்றும் மழை இருந்தது. இந்நிலையில் வானியல் ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை அன்று அதிக மழை இருக்கும் என்று கணித்துள்ளனர்.

சிறிய அளவிலான மழைக்கே அபாய நிலை ஏற்படும் நகரக் கட்டமைப்பு என்பதால், கர்நாடக மாநில பேரிடர் கண்காணிப்பு மையம் அனைத்துப் பொதுமக்களையும் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்துள்ளது.

மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று, மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மரங்கள் விழுந்தால் அவற்றை அப்புறப்படுத்தவும், மற்ற குப்பைகளைச் சுத்தப்படுத்தவும் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

முன்னதாக வார்தா புயல் எதிரொலியாக, சென்னை மற்றும் பெங்களூருவுக்கு இடையேயான 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் 11 விமானங்களும், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை வர வேண்டிய 14 விமானங்களும் அடக்கம்.

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் செய்தித்தொடர்பாளர் விமானத்தில் பயணம் செய்தவர்கள் குறித்துக் கூறும்போது, '' விமான நிலையத்தில் ஒரு சரக்கு விமானமும், 15 பயணிகள் விமானங்களும் இருந்தன. பயணிகள் விமானத்தில் ஒவ்வொன்றிலும் 100 - 150 பயணிகள் இருந்தனர். அவர்களுக்கு செவ்வாய்க் கிழமை பயணிக்கும் வகையில் விமான நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. வேறு வழிகளில் சென்னை செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT