இந்தியா

என்டிபிசி மின் நிலையங்களில் 2 நாளுக்கே நிலக்கரி இருப்பு: இறக்குமதிக்கு உடனடி நடவடிக்கை

செய்திப்பிரிவு

பருவமழை வழக்கமான அளவை விட குறைந்துள்ளதால் நாட்டின் மின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அரசுக்குச் சொந்தமான என்டிபிசியின் கீழ் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களில் 2 நாளுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கை இருப்பில் உள்ளது.

இது பற்றி அரசை என்டிபிசி உஷார்படுத்தியதும், மின் உற்பத்தி பாதிக்காத வகையில் நிலக்கரி இறக்குமதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதாக மக்களவையில் எரிசக்தித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தார்.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதிய நிலக்கரியை வினியோகம் செய்ய இறக்குமதி செய்யவும் நடப்பு ஆண்டின் இலக்கைவிட அதிக அளவில் நிலக்கரியை வெட்டி எடுக்கவும் கோல் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

தேவைப்பட்டால் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன் படுத்தும்படியும் மின் உற்பத்தி நிலையங்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளன. கூடுதலாக நிலக்கரி வெட்டி எடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கோரப் பட்டுள்ளது. மேலும் நிலக்கரியை விரைவாக எடுத்துச்செல்ல உதவும்படி ஒடிஸா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்துக்கு வெளியில் நிருபர்களிடம் பேசிய கோயல் தெரிவித்தார்.

தமது கட்டுப்பாட்டில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களில் 6-ல் போதுமான அளவில் நிலக்கரி கையிருப்பு இல்லை என என்டிபிசி ஜூலை 14-ம் தேதி எச்சரித்தது.

நாடு முழுவதும் உள்ள 100 மின் உற்பத்தி நிலையங்களில் 46 நிலையங்களில் ஒரு வாரத்துக்கு தேவையான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாக மத்திய மின் ஆணையம் உஷார்படுத்தியது.

இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் என்டிபிசியின் பங்கு 15 சதவீதம். நிலக்கரி விநியோகம் சிறிதளவு தடைபட்டாலும் சமாளிக்க முடியாது என என்டிபிசி தலைவரும் நிர்வாக இயக்குநருமான அருண்ராய் சவுத்ரி மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

SCROLL FOR NEXT