இந்தியா

பயிர் கடனைத் திருப்பிச் செலுத்த மேலும் 30 நாள் அவகாசம்: ரிசர்வ் வங்கி உத்தரவு

செய்திப்பிரிவு

கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் டெபாசிட் செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டது.

இதற்கிடையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப் படுத்தப்பட்டது. ஆனால் வங்கிகள், ஏடிஎம்களில் புதிய நோட்டுகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர்.

பண மதிப்பு நீக்கம் காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட இந்த பணத் தட்டுப்பாடு இன்னும் சீராகாததால், பயிர்க் கடன் தவணையை திருப்பிச் செலுத்த மேலும் 30 நாள் அவகாசம் வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

முன்னதாக, கடந்த நவம்பர் 21-ம் தேதி 60 நாள் அவகாசம் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கெனவே கூறியிருந்தது. இந்த நிலையில் மேலும் 30 நாள் அவகாசம் வழங்குமாறு ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் கடன் வாங்கியவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும். தவிர நவம்பர் 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான தவணைத் தொகைக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும் எனவும் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன், ஓவர் டிராப்ட் உள்ளிட்டவைக்கும் இது பொருந்தும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

SCROLL FOR NEXT