சண்டிகர்: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். 100 நாட்களை கடந்து அவருடைய யாத்திரை தற்போது ஹரியாணா மாநிலத்தில் நடைபெறுகிறது. ராகுல் காந்தியின் யாத்திரையில் அன்றாடம் பிரபலங்கள் யாராவது இணைவது வழக்கமாகவே இருக்கிறது.
சில நேரங்களில் குழந்தைகளுடன் கராத்தே போடுவது, சைக்கிள் ஓட்டுவது, யாத்திரைக்கு வரும் செல்லப் பிராணிகளுடன் கொஞ்சி மகிழ்வது என்று சில சுவராஸ்யங்களும் பக்கவாட்டில் நிகழ்ந்துவிடுகின்றன.
அந்த வகையில் இன்று காலை ஹரியாணாவில் நடந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவின் வளர்ப்பு நாயான லூனா இணைந்து கொண்டது. இது பற்றிய தகவலை காங்கிரஸ் கட்சி அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், "உங்கள் யாத்திரையின் போது களத்திற்கு வந்த செல்லப் பிராணிகள் பலவற்றை நீங்கள் வாஞ்சையுடன் ஆதரித்ததை லூனா இத்தனை நாட்களாக பொறுமையாக கவனித்திருந்தது. இன்று போதும் போதும் என்று முடிவுகட்டி அதுவே உங்கள் யாத்திரைக்கு வந்துவிட்டது. லூனாவுக்கு கொஞ்சம் பொறாமை. உங்கள் அன்பை யாரிடமும் பங்குபோட்டுக் கொள்ள அவள் விரும்பவில்லை. எங்களுக்கு புரிந்துவிட்டது லூனா!" என்று பதிவிட்டுள்ளது.
லூனா பிரியங்கா வீட்டின் செல்லம் என்றாலும் ராகுலின் அபிமானம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைப் பகிர்ந்த பிரியங்கா காந்தி, "லூனா கடத்தப்பட்டது" என்று நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரை தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைக் கடந்து அதன் 108-வது நாளில் டெல்லிக்குள் நுழைந்துள்ளது. ஜனவரி 5ம் தேதி ஹரியாணாவிற்குள் நுழைந்த யாத்திரை பஞ்சாப் வழியாக பயணித்து வரும் 26 ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் நிறைவடைகிறது.