தன் பாலின உறவாளர்களின் உரிமையைக் காப்பது அரசின் கடமை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.
தன் பாலின உறவாளர்கள் விவகாரத்தில் பாஜக தலைவர் களுக்குள் ஒருமித்த கருத்து இல்லை. இப்போது மத்திய உள்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங், முன்பு பாஜக தேசிய தலைவராக இருந்தார்.
அப்போது தன் பாலின உறவு என்பது இயற்கைக்கு முரணானது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அதே நேரத்தில் அருண் ஜேட்லி, தன் பாலின உறவாளர்களுக்கு ஆதரவாக டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹர்ஷ்வர்தனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர் கூறியது: நாட்டில் உள்ள அனைவருக்குமே அடிப்படை மனித உரிமைகள் உண்டு. இதில் தன் பாலின உறவாளர்களும் அடங்குவார்கள். அனைவரது உரிமைகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை என்றார். இதுதான் உங்கள் கட்சி யான பாஜகவின் கருத்தா என்ற கேள்வியை அவர் தவிர்த்து விட்டார்.
முன்னதாக தன் பாலின உறவு கிரிமினல் குற்றமாகாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இதனை நிராகரித்த உச்ச நீதிமன்றம் தன் பாலின உறவை கிரிமினல் குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவு சரியானதுதான் என்று தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக மறு ஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது.
இதனை சுட்டிக்காட்டிப் பேசிய ஹர்ஷ் வர்தன், இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆலோசித்துதான் இறுதி முடிவை எடுக்கும். பாஜகவும் ஆலோசனை நடத்தி தங்கள் உறுதியான கருத்தை தெரிவிக் கும் என்றார்.