மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலாளர் லீனா நாயரின் பணியில் அத்துறையின் அமைச்சர் மேனகா காந்தி அதிருப்தி அடைந்துள்ளார். லீனா தனது சக அதிகாரிகளுக்கு பணியில் நெருக்கடி கொடுப்பதாக பிரதமர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக லீனா தனது சக அதிகாரிகளுடன் இணக்கமாக பணியாற்றவில்லை எனக் கூறப்படுகிறது. இத்துடன் துறையின் கோப்புகள் மீது அவர் எடுக்கும் நடவடிக்கைகள் மீதும் மேனகா அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகி றது. இதனால், லீனா நாயர் மீது அவரது சக அதிகாரிகள் அத்துறை யின் அமைச்சர் மேனகா காந்தியிடம் புகார் செய்துள்ளனர். இதில் ஒருவர், லீனா மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தான் ராஜினாமா செய்யப்போவதாகவும் கூறியுள்ளார். வேறு வழியின்றி மேனகா, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை இணை அமைச்சர் தினேஷ் சிங்கிடம் லீனா நாயர் மீது புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “லீனாவுடன் பணி யாற்ற மறுத்து பல அதிகாரிகள் தங்களை வேறு இடங்களுக்கு மாற்றும்படி கேட்டுள்ளனர். எங்கள் துறையின் இணை அமைச்சரான கிருஷ்ண ராஜுவும் அதிருப்தியில் உள்ளார். கோப்புகளை விரைந்து அனுப்ப விரும்பும் லீனா, அதன் விதிமுறைகளை மீறுவது சக அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை. சமீபத்தில் என்.ஜி.ஓ.க்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பான கோப்பு களை தனது பார்வைக்கு அனுப்பா மல் விட்டது அமைச்சர் மேனகா வுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி விட்டது” என்று தெரிவித்தனர்.
1982-ம் ஆண்டு பேட்ச், தமிழக பிரிவு அதிகாரியான லீனா நாயர், தமிழகத்தில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்தவர். இவர் கடந்த ஜூன் 1-ம் தேதி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.