இந்தியா

நதிநீர் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்ப்பாயம்: மத்திய அரசு திட்டம்

செய்திப்பிரிவு

அனைத்து நதிநீர் பிரச்சினைகள் குறித்தும் விசாரணை நடத்த ஒரே தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகம், கர்நாடகம் இடையே மிக நீண்ட காலமாக காவிரி நதிநீர் பிரச்சினை நீடிக்கிறது. இதேபோல கோவா, கர்நாடகம், மகாராஷ்டிரா இடையே மகதாயி நதிநீர் பிரச்சினை, ஒடிஷா, சத்தீஸ்கர் இடையே மகாநதி நீர் பிரச்சினைகள் நீடிக்கின்றன. இவை தவிர பல்வேறு மாநிலங்களில் நதிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.

தற்போதைய நிலையில் காவிரி, மகதாயி, ரவி, பியாஸ், கிருஷ்ணா உள்ளிட்ட நதி நீர் விவகாரங்கள் தொடர்பாக 8 தீர்ப்பாயங்கள் உள்ளன. இந்த தீர்ப்பாயங்களில் நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மிகுந்த காலதாமதம் ஏற்படுவதாக மத்திய அரசு கருதுகிறது.

இதுதொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது அனைத்து நதிநீர் பிரச்சினைகள் குறித்தும் விசாரணை நடத்த ஒரே தீர்ப்பாயத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாநிலங்கள் நதிநீர் பிரச்சினைகள் சட்டம் 1956-ல் திருத்தம் செய்து புதிய மசோதாவை அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய நீர்வளத் துறை செயலாளர் சசி சேகர் உறுதி செய்துள்ளார். அவர் கூறியதாவது: அனைத்து நதிநீர் பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காணும் வகையில் ஒரே தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இருப்பார். தேவைக்கேற்ப தீர்ப்பாயத்தில் அமர்வுகள் உருவாக்கப்படும். பொதுவாக நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீண்ட காலதாமதம் ஏற்படுகிறது. புதிய தீர்ப்பாயம் 3 ஆண்டுகளுக்குள் தீர்ப்பு வழங்கும்.

தீர்ப்பாயத்துடன் டி.ஆர்.சி. என்ற தீர்வு கமிட்டியும் அமைக்கப்படும். இதில் துறைசார் நிபுணர்கள் இடம்பெறுவார்கள். நதிநீர் பிரச்சினை தொடர்பாக ஒரு மாநிலம் முறையிடும்போது மத்திய அரசு உடனடியாக டி.ஆர்.சி. கமிட்டியை நியமிக்கும். இந்த கமிட்டியின் தீர்ப்பில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தீர்ப்பாயத்தை அணுகலாம்.

புதிய தீர்ப்பாயத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படும். அந்த தீர்ப்பாயம் வழங்கும் உத்தரவுகள் அந்த நிமிடத்திலேயே அரசாணைகளாக அங்கீகரிக்கப்படும். இதன் மூலம் அரசாணை வெளியிடுவதில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT