கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜகவும் இடதுசாரிகளும் ஓரணியில் இருக்கிறார்கள் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் மம்தா பானர்ஜி உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது: ''பாஜகவுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே மாறுபட்ட கொள்கைகள் இருந்தாலும், மேற்கு வங்கத்தில் அவர்கள் இருவருமே ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குள் மறைமுக புரிந்துணர்வு இருப்பதாக சந்தேகம் இருக்கிறது.
அனைவரையும் தழுவிய சித்தாந்தத்தை திரிணமூல் காங்கிரஸ் கொண்டிருக்கிறது. எனவே, ஒவ்வொருவரின் நலமும் வளமும் நமக்கு முக்கியம். ஆனால், பாஜக மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் அரசியலை செய்கிறது. மக்களைத் தேடி அரசு எனும் திட்டத்தை மேற்கு வங்க அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், ஒவ்வொருவரின் வீட்டு வாசலுக்கும் அரசின் நலத்திட்டங்கள் போய்ச் சேர்ந்திருக்கின்றன.
எனவே, தொண்டர்கள் மாநிலம் தழுவிய அளவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். தரிணமூல் காங்கிரசில் உள்ள 3.5 லட்சம் தொண்டர்களும் ஒரு வீடு விடாமல் அனைவரையும் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும்'' என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரும் 11ம் தேதி முதல் தொடர்ந்து 60 நாட்களுக்கு அக்கட்சி பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பது குறிப்பிடத்தக்கது.