புதுடெல்லி: தங்கள் பகுதியில் இளம்பெண் ஒருவரை காரில் இழுத்துச் சென்று கொலை செய்த குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி சுல்தான்புரி காவல் நிலையம் முன்பு ஏராளமான பொதுமக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் டெல்லியில் சுல்தான்புரி பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது இருச்சக்கர வாகனத்தில் வேலை நிமித்தமாக வெளியே சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது ஒரு காருடன் இருச்சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் அந்த காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். அப்போது விபத்தில் சிக்கிய அந்த பெண்ணின் ஆடை அவர்களது காரில் சிக்கியுள்ளது. சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரை அந்த இளம்பெண் இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. இளம்பெண்ணின் உடலை போலீஸார் கண்டெடுத்தபோது உடலில் ஆடை ஏதும் இருக்கவில்லை.
இந்தநிலையில், தங்கள் பகுதியில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறி உள்ளூர் மக்கள் சுல்தான்புரி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறுகையில், "டெல்லியில் நிலவும் குளிரைச் சமாளிக்க அனைவரும் நான்கு ஐந்து அடுக்கு ஆடைகள் அணிகின்றனர். அப்படி இருக்கையில் வெளியே சென்ற பெண் எப்படி உடலில் ஆடை இல்லாமல் கண்டெடுக்கப்பட்டார் " என்று கேள்வி எழுப்பினார்.
பாதிக்கப்பட்டவரின் உறவினர் கூறுகையில், "போலீஸார் எங்களை அழைத்து, எங்களுடைய பெண்ணிற்கு விபத்து நேர்ந்துள்ளது என்று தெரிவித்தனர். அவளின் மரணத்திற்கு காரணமான அனைவருக்கும் மரணதண்டனை வழங்க வேண்டும். அவர்கள் அனைவரும் அவளின் குடும்பத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.
இறந்தவரின் தாய் ரேகா, "நான் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு அவளிடம் பேசும்போது எப்போது வீட்டிற்கு வருவாய் என்று கேட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவதாக கூறினாள். பிறகு நான் என்னுடைய மருந்து சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டேன் அதற்கு பின் நடந்தது எனக்கு தெரியாது. போலீஸாரோ இதுகுறித்து எதுவும் செய்யாமல், இந்த சம்பவம் ஒருவிபத்து போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் என்று கூறினார்.
ஒரு காரின் அடியில் பெண் ஒருவரின் உடல் இழுத்துச் செல்லப்படுவதை பார்த்த தீபக் என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, கஞ்சவாலா சாலையில் சில கிலோ மீட்டர்களுக்கு இடையில் மூன்று முறை அவர்கள் யூ டர்ன் எடுக்கும் போதும், காரின் அடியில் ஒரு உடல் சிக்கி இருப்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் போலீசார் என்னை அழைத்து நான் எங்கே உடலைப் பார்த்தேன் என்று கேட்கின்றனர் என்றார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொருவரான விகாஸ் சொமோட்டோ நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்க்கிறார். அவர் கூறுகையில், நான் ஒரு டெலிவரி ஆர்டரை முடித்து விட்டு வரும் போது, மகாராஜா அக்ரசென் சவுக் பகுதியில் ஒரு கார் என்னை இடிப்பது போல் வேகமாக சென்றது. காரில் இருந்தவர்கள் எதிரில், போலீஸார் வைத்திருக்கும் தடுப்பு இருப்பதைப் பார்த்து வேகமாக யூ டர்ன் எடுத்தனர். அப்போது காரில் ஒரு பெண்ணின் தலை மாட்டியிருப்பதை நான் பார்த்தேன். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், பைக்கில் வந்த இரண்டு போலீசாரிடம் சம்பவம் குறித்து தெரிவித்தேன் என்றார்.
இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக மாருதி பொலேனோ காரில் பயணம் செய்த 5 பேர் பிடிபட்டுள்ளனர். சுல்தான்புரி காவல்நிலையத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் அங்கிருந்த மாருதி பொலேனோ காரினை ஆய்வு செய்தனர்.