ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை 
இந்தியா

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி | நிதிஷ் குமாரை தொடர்ந்து சிவசேனாவும் ஆதரவா?

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: வரும் 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்த காங்கிரஸ் முயல்கிறது. இதற்கு ஐக்கிய ஜனதா தள தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிராவின் சிவசேனாவும் ஆதரவளித்துள்ளது.

இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரபூர்வ இதழான 'சாம்னா'வில் கட்டுரை வெளியாகி உள்ளது. இதன் ஆசிரியரும் சிவசேனாவின் தேசிய செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ரவுத், காங்கிரஸின் ராகுல் காந்திக்கு ஆதரவளித்து தனது கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். ராகுலின் ஒற்றுமை யாத்திரையை பாராட்டி சஞ்சய் எழுதியுள்ளது, பிஹார் முதல்வர் நிதிஷுக்கு பிறகு 2024 தேர்தலில் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சிவசேனாவும் ஆதரித்துள்ளதாகவே கருதப்படுகிறது.

இது குறித்து சாம்னாவில் சஞ்சய், "நாட்டை ஒற்றுமைப்படுத்த ராகுல் காந்தி பாதயாத்திரை நடத்துகிறார். அந்த யாத்திரை வெற்றியடையும் வாய்ப்புகள் உள்ளன. இந்த 2023 வருடம் முதல் நம் நாடு அச்சத்திலிருந்து விடுதலை பெறும் என நம்புகிறேன். கன்னியாகுமரியில் தொடங்கி 2,800 கி.மீ தொலைவை கடந்த ராகுலின் புதிய சுறுசுறுப்பை டெல்லியிலேயே முடக்கிவிட ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அதனை முறியடித்து யாத்திரையை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்த உள்ளார் ராகுல் காந்தி" என்று குறிப்பிட்டுள்ளார்.

யாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல் கடும் குளிரிலும் வெறும் டி-ஷர்ட் மட்டுமே அணிந்திருந்தது சர்சையை கிளப்பியது. குறிப்பாக அவர் வாஜ்பாய் நினைவிடத்திற்கு டிஷர்ட்டுடன் சென்றது விவாதப் பொருளானது. இது குறித்து சஞ்சய் ரவுத், "கடும் குளிரில் வெறும் டி-ஷர்ட்டை அணிந்திருப்பது தொடர்பான சர்ச்சைக்கு ராகுல் அளித்த பதில் மனதை தொடுவதாக உள்ளது. இக்கேள்வி ஏழை உழைப்பாளிகளிடமும், விவசாயிகளிடமும் கேட்கப்படாதது ஏன்? என அவர் அளித்த பதில் சரியானதே" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாதயாத்திரைக்கு பின் ராகுலை 2024-இல் பிரதமர் வேட்பாளராக்க காங்கிரஸ் முயல்வது குறித்து சஞ்சய், "2024 மக்களவைத் தேர்தலில் ராகுலை பிரதமர் வேட்பாளராக்க முயல்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அதற்கு முன் அனைவரும் அமர்ந்து பேச வேண்டி உள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் பல அரசியல் கட்சிகளும் பேச விருப்பப்படலாம். இதில் அனைவரும் கூடி பேசிவிட்டால் ராகுலை பிரதமர் வேட்பாளராக்குவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.

சிவசேனாவின் சஞ்சய் ரவுத் கூறியதை போலவே, இதற்கு முன் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான நிதிஷும் கூறியிருந்தார். இதனால், 2024 மக்களவை தேர்தலை ராகுல் பிரதமர் வேட்பாளராகும் கருத்து வலுத்து வருவதாகக் கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT