இந்தியா

இந்தியாவில் வாழ்க்கைத் தரம் மோசமான நிலையில் நீடிக்கிறது: ஐ.நா. ஆய்வு

செய்திப்பிரிவு

சமீபத்தில் வெளியான ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சி அட்டவணையின்படி, இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் முந்தைய அட்டவணையிலிருந்து சற்றும் மாறுபடாமல், 187 நாடுகளில் 135-ஆம் இடத்தில் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது

இது தொடர்பாக வியாழக்கிழமை ஐ.நா. வெளியிட்டுள்ள மனித வளர்ச்சி திட்டத்தின் (Human Development Index-HDI) அறிக்கையில், "2013-ஆம் ஆண்டின் மனித வளர்ச்சி அட்டவணையில் இந்தியாவின் மதிப்பு 0.586-ஆக உள்ளது. இது நடுத்தரப் பிரிவாகும். 1980-ஆம் ஆண்டு முதல் 2013-ஆண்டு வரை இந்தியாவின் மதிப்பீடு 0.369-ல் இருந்து 0.586 வரை உயர்ந்துள்ளது" என்று தெரிவிக்கின்றது.

மேலும், பிரிக்ஸ் நாடுகளின் வரிசைப்படி, மனித வளர்ச்சி அட்டவணையின் மதிப்பீட்டில், இந்தியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

"வாழ்க்கையின் எதிர்கால நிலை (Life Expectancy) என்ற ஒரு பிரிவைத் தவிர்த்து, ப்ரிக்ஸ் நாடுகளில் மற்ற அனைத்துப் பிரிவுகளிலும் இந்தியா கடைசி நிலையில் உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் எய்டஸ் நோய் பெருவாரியாகப் பரவியுள்ளதால், வாழ்க்கையின் எதிர்கால நிலை என்ற பிரிவில் மட்டும் அந்நாடு கடைசி நிலையில் உள்ளது" என்று அறிக்கை தெரிவிக்கின்றது.

ப்ரிக்ஸ் நாடுகளில் ரஷ்யா, பிரேசில் மற்றும் சீனா அதிகமான ஹெச்.டி.ஐ (HDI value) மதிப்பீட்டுடன் முன்னணி நிலையில் உள்ளது. ரஷ்யா 57-ஆம் இடத்திலும், பிரேசில் 79-ஆம் இடத்திலும், சீனா 91-ஆம் இடத்திலும் உள்ளன. நடுத்தரப் பிரிவில், தென் ஆப்பிரிக்கா 118-ஆம் இடத்திலும், இந்தியா 135-ஆம் இடத்திலும் உள்ளன.

மக்களின் வாழ்க்கைத்தரம், ஆரோக்கியமான வாழ்க்கை, அறிவு சார்ந்த வளர்ச்சி கிடைக்கும் வசதி ஆகிய மூன்று பரிமாணங்களின் அடிப்படையில் இந்த மனித வளர்ச்சி அட்டவணை உருவாக்கப்படுகிறது. இந்த ஆய்விற்கு, 2012-ஆம் ஆண்டு மற்றும் 2011-ஆம் ஆண்டில் நடந்தது போலவே, 2013-ஆம் ஆண்டிலும் 187 நாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

SCROLL FOR NEXT