பெங்களூரு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை கர்நாடகா வந்தார். மண்டியா, ராம்நகர், பெங்களூரு ஆகிய இடங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பெங்களூருவில் இந்தோ – திபெத்திய எல்லை காவல் படையின் (ஐடிபீபி) துப்பறிதல் பயிற்சி மையத்தை அவர் நேற்று தொடங்கிவைத்து பேசியதாவது:
மத்திய அரசின் ஆயுத காவல்படைகளில் மிகவும் மோசமான வானிலையில் ஐடிபீபி செயல்படுகிறது. இந்திய – சீன எல்லையில் ஐடிபீபி வீரர்கள் ரோந்து செல்வதாலும் முகாமிடுவதாலும் நமது நிலத்தில் ஓர் அங்குலத்தை கூட எவராலும் ஆக்கிரமிக்க முடியாது. மைனஸ் 42 டிகிரி குளிரிலும் நமது எல்லையை அவர்கள் காக்கின்றனர்.
வலுவான மன உறுதியும் உச்சபட்ச தேசபக்தியும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஐடிபீபி வீரர்களை இந்திய மக்கள் பனிக்கு துணிந்த இதயங்கள் என்று அழைக்கின்றனர். பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் விருதுகளைவிட இந்தப் பாராட்டு உயர்வானது. இவ்வாறு அமித் ஷா பேசினார்
தனித்துப் போட்டி: தொடர்ந்து பெங்களூருவில் பாஜக சாபில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: காங்கிரஸ் கட்சியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கர்நாடகாவை முன்னேற விடாமல் தடுக்கின்றன. 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். மஜதவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.
கர்நாடக மக்கள் பாஜகவை ஆதரிக்க முடிவெடுத்து விட்டார்கள். நான் சென்ற இடமெல்லாம் மக்களிடம் பாஜகவுக்கு ஆதரவான மனநிலை இருந்ததை உணர முடிந்தது. பாஜகவை வெற்றி பெறச் செய்தால், கர்நாடகாவின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.