‘‘நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுமையாக முடங்கியது பற்றி, பாஜக மூத்த தலைவர் அத்வானி கவலை தெரிவித்துள்ளார். இதை பாஜக கவனத்தில் கொண்டு பண மதிப்பு நீக்கம் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும்’’ என்று கூட்டணி கட்சியான சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
பாஜக.வின் கூட்டணியின் கட்சி யான சிவசேனா கட்சியின் அதிகாரப் பூர்வ இதழான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் அமளியால் முடங்கியது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அத்வானி தனது கவலையை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அவர் காங்கிரஸ் தலைவர் கிடையாது. பாஜக.வின் மூத்த தலைவர். இந்திய அரசியலில் ‘பீஷ்மர்’ போன்றவர். நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்து அவர் கேள்வி எழுப்பி உள்ளார். அவருடைய கவலையை கவனத்தில் எடுத்துக் கொண்டு, பண மதிப்பு நீக்கம் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை பாஜக கூட்ட வேண்டும்.
கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத்துக்குள் முதன்முதல் நுழையும் போது, பிரதமர் மோடி மண்டியிட்டு வணங்கி கண்ணீர் சிந்தினார். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நடப்பதைப் பார்த்து, அந்த நாடாளுமன்ற கட்டிடமே கண்ணீர் வடிக்கிறது.
ஆயிரத்துக்கும் இரண்டாயிரத் துக்கும் நாட்டு மக்கள் வங்கி வரிசையில் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர். ஆனால், பணக்காரர்களின் வீடுகளில் கோடிக்கணக்கில் புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதில் சொல்லாவிட்டால், பிரதமர் மோடி பதில் அளிக்காவிட்டால் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். அங்கு ரிசர்வ் வங்கி ஆளுநரை அழைத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.