இந்தியா

ரூ.14,000 கோடி கணக்கு காட்டிய குஜராத் தொழிலதிபர் வீட்டில் சோதனை

செய்திப்பிரிவு

கணக்கில் வராத வருமானம், சொத்துகளை தாமாக முன்வந்து சமர்ப்பிக்கும் திட்டம் (ஐடிஎஸ்) கடந்த ஜூன் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம் செப்டம்பர் 30-ம் தேதி நிறைவடைந் தது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ரூ.13,860 கோடி சொத்து விவரங்களை தாக்கல் செய்தார்.

ஐடிஎஸ் திட்டத்தில் சமர்ப்பித்த சொத்துகள், வருவாய்க்கு 30 சதவீத வரி, அபராத வரி உட்பட மொத்தம் 45 சதவீத வரி செலுத்த வேண்டும். இந்தத் தொகையை 4 தவணைகளில் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அகமதாபாத் தொழிலதிபர் மகேஷ் ஷா தாக்கல் செய்த சொத்துகளுக்கு முதல் தவணை யாக ரூ.1,500 கோடியை அவர் செலுத்த வேண்டும். இதற்கான காலக்கெடு கடந்த 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால் அவர் வரியை செலுத்தாமல் தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில் மகேஷ் ஷாவின் அகமதாபாத் வீடு மற்றும் அலுவல கங்களில் வருமான வரித்துறை யினர் சோதனை நடத்தியுள்ளனர். அவரின் ஆடிட்டர் சேத்னாவின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக ஆடிட்டர் சேத்னா கூறியதாவது:

மகேஷ் ஷா தானாகவே முன் வந்து ரூ.13,860 கோடிக்கான சொத்து விவரங்களை தாக்கல் செய்தார். அவரது தகவல்கள் உண்மைதானா என்பது இப்போது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

கடந்த 29, 30, 1-ம் தேதிகளில் மகேஷ் ஷாவின் வீடு, அலுவல கங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT