இந்தியா

எங்கே பூகம்பம்?- ஊழல் குற்றச்சாட்டு எழுப்பிய ராகுலுக்கு மோடி கிண்டல் கேள்வி

பிடிஐ

பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சஹாரா, பிர்லா குழுமங்களிடமிருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியதையடுத்து பதில் அளித்துள்ள மோடி, ராகுல் குற்றச்சாட்டை கிண்டல் செய்துள்ளார்.

வாரனாசியில் பேசிய பிரதமர் மோடி கூறும்போது, “காங்கிரஸ் கட்சியில் ஒரு இளம் தலைவர் இருக்கிறார், இப்போதுதான் அவர் பேசவே கற்றுக்கொண்டுள்ளார். அவர் பேசத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

2009-ம் ஆண்டு பாக்கெட்டில் என்ன இருந்தது என்பதை கண்டுபிடிக்க கடினமாக இருந்தது, இப்போது தெளிவாக உள்ளது. பாக்கெட்டில் என்ன இருந்தது என்பது நமக்கு தெரியவந்துள்ளது. அவர் பேசத் தொடங்கியிருப்பது நல்லது. பூகம்பம் ஏற்பட சாத்தியமேயில்லை.

நாம் மீள 10 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. கடவுளுக்கு நன்றி அவர் பேசத்தொடங்கி விட்டார். இப்போது பூகம்ப அச்சுறுத்தல் இல்லை. ஒருவேளை அவர் பேசாது போயிருந்தால் நாடு பூகம்பத்தை எதிர்கொண்டிருக்கலாம். ஒருபுறம் கறுப்புப் பணம் அம்பலமாகிறது என்றால் மறுபுறம் கறுப்பு மனங்களும் அம்பலமாகி வருகிறது.

60% மக்கள் படிப்பறிவில்லாதவர்கள் இவர்கள் ஆன் லைன் வர்த்தகம் செய்ய முடியுமா? என்று கேட்கிறார். நான் என்ன மந்திர தந்திரம் செய்து மக்களை படிப்பறிவில்லாதவர்களாக்கி விட்டேனா? யார் அவர்களை படிப்பறிவில்லாமல் வைத்திருந்தது?

அதே போல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியது அவரது ஆட்சியின் அறிக்கை போன்றல்லவா இருக்கிறது. நீங்கள் ஒரு முன்னாள் பிரதமர் நீங்கள் பேசுவதை நாங்கள் கூர்ந்து கவனிக்கிறோம் ஆனால் நீங்களோ உங்கள் ஆட்சியின் நிலவரத்தை வெளியிடுகிறீர்கள். 1970-72 முதல் நாட்டின் முக்கிய பொருளாதாரத் திட்ட வகுத்தல்களில் மன்மோகன் சிங் பங்கு உள்ளது என்பதை சிலரே அறிந்துள்ளனர்.

நாட்டிலுள்ள 50% கிராமங்களில் மின்சார வசதி இல்லை, ரொக்கமற்ற டிஜிட்டல் பரிவர்த்தனை எப்படி சாத்தியம் என்கிறார் முன்னாள் நிதியமைச்சர் (ப.சிதம்பரம்) நானா மின்கம்பங்களையும் ஒயர்களையும் பிடுங்கி எறிந்தேன்?” என்று படுகிண்டலாக பேசியுள்ளார் மோடி.

ராகுல் பதிலடி:

சஹாரா, பிர்லா குழுமங்களிடமிருந்து மோடி தனிப்பட்ட முறையில் லஞ்சம் பெற்றுள்ளார் என்ற ராகுல் காந்தி குற்றச்சாட்டை கிண்டல் மூலம் புறந்தள்ளிய பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி மீண்டும் பதில் அளித்துள்ளார்.

இந்தி மொழியில் அவர் தனது ட்வீட்டில், “சஹாரா கொடுத்த 10 பாக்கெட்டுகளில் என்ன இருந்தது என்பதை தெரிவிக்க முடியுமா மோடிஜி?” என்று கேள்வி எழுப்பி அக்டோபர் 2013 முதல் பிப்ரவரி 2014 வரை வருமான வரித்துறையின் பதிவாகக் காட்டப்பட்டுள்ள ஒரு 10 எண்ட்ரியை, அதாவது கேஷ் பேமண்ட்ஸ் டு மோடிஜி” என்று தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டதாக காட்டப்பட்ட ஆவணம் ஒன்றையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT