டெல்லியின் புதிய துணை நிலை ஆளுநராக, முன்னாள் உள்துறை செயலாளர் அனில் பைஜால் (70) நாளை பதவியேற்கிறார்.
பிரதமர் அலுவலக பரிந்துரை யின் அடிப்படையில் டெல்லி ஆளுநராக அனில் பைஜால் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்தார்.
1969-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பைஜால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் உள்துறை செயலாளராக பதவி வகித்தவர்.
கடந்த 2006-ல் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக செயலாளராக இருந்து ஓய்வு பெற்றார். டெல்லி வளர்ச்சி ஆணைய துணைத் தலைவராக பைஜால் பதவி வகித்துள்ளார். மன்மோகன் சிங் ஆட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டில் முக்கியப் பங்காற்றினார். இவர் நாளை டெல்லி ஆளுநராக பதவியேற்கிறார்.
டெல்லி துணை நிலை ஆளுநராக நஜீப் ஜங் பதவி வகித்தார். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் ஆளுநருக்கும் இடையில் அதிகார மோதல் நிலவியது. டெல்லி அரசு நியமனங்களை ஆளுநர் ரத்து செய்தார். இதனால் இருவருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவியது.
இந்நிலையில் கடந்த வாரம் நஜீப் ஜங் பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி அரசு தொடர்ந்து சர்ச்சையை எழுப்பியதால் நஜீப் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. அதை அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.