பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மத்திய அரசு நாளுக்கு ஓர் அறிவிப்பை வெளியிடுவது நாட்டு மக்கள் பெரும் இடையூறாக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து விதி எண் 56-ன் கீழ் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என பிடிவாதத்தில் இருக்கும் காங்கிரஸ். மத்திய அரசும் தனது பிடிவாதத்தை சற்றும் தளர்த்திக் கொள்வதாக இல்லை.
இதனால், ஒவ்வொரு நாளும் அவை கூடுவதும் பின் அவை அடுத்தடுத்த முறைகள் ஒத்திவைக்கப்படுவதும் ஒருகட்டத்தில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதும் வழக்கமாக இருக்கிறது.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை மக்களவை கூடியது. அப்போது, எதிர்க்கட்சியினர், ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கையில் பிரதமர் மோடிக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து மக்களவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை கூடியபோது பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார், "கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காதீர்கள். ஒட்டுமொத்த நாடும் பிரதமர் நரேந்திர மோடியின் பின்னால் உள்ளது. நாங்கள் விவாதத்துக்குத் தயாராகவே உள்ளோம். ஆனால் எதிர்த்தரப்பு ஆசைப்படும் விதத்தில் அல்ல.
மக்களவையின் நான்கில் மூன்று பங்கினர் விவாதத்துக்குத் தயாராக உள்ளனர். ஆனால் அவர்கள்தான் (காங்கிரஸ் தரப்பை நோக்கி) தயாராக இல்லை'' என்று கூறினார்.
கார்கேவின் காட்டமான பதில்:
அப்போது குறுக்கிட்ட மல்லிகார்ஜுன கார்கே, "நோட்டு நடவடிக்கை குறித்து விதி எண் 56-ன் கீழ் விவாதத்துக்கு அனுமதிக்க வேண்டும். இது மிகப்பெரிய ஊழல். அரசு ஊழியர்களும், ஏழை, எளிய மக்களும் தங்கள் சம்பளத்தை பெற முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் படும் அல்லலை அவையில் எடுத்துரைக்க விரும்புகிறோம். ஆனால், நீங்களோ விவாதத்திலிருந்து தப்பி ஓடுகிறீர்கள்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மத்திய அரசு நாளுக்கு ஓர் அறிவிப்பை வெளியிடுவது நாட்டு மக்கள் பெரும் இடையூறாக இருக்கிறது. இதனால் அப்பாவி மக்கள் தவணை முறையில் படுகொலை செய்யப்படுவதுபோன்ற இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அரசோ மிக இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது" என்றார்.
சுமித்ராவின் கண்டனம்:
மல்லிகார்ஜுன கார்கே நோட்டு நடவடிக்கை மத்திய அரசின் மிகப் பெரிய ஊழல் எனக் குறிப்பிட்டதற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டனம் தெரிவித்தார்.
அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட மக்களவை இன்றும் (வியாழக்கிழமையும்) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.