ரவிக்குமார் எம்.பி. | கோப்புப் படம் 
இந்தியா

‘ராணுவ ரகசியம்’ - சீன அச்சுறுத்தல் குறித்த எம்.பி ரவிக்குமாரின் கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சகம் பதிலளிக்க மறுப்பு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: சீன ராணுவம் நமது எல்லைக்குள் குவிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தில் திமுக எம்.பியான டி.ரவிக்குமார் குறுகிய விணா எழுப்பினார். இது ராணுவ ரகசியம் என்பதால் அதன் மீதான பதிலை அளிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விழுப்புரம் மக்களவை தொகுதி எம்.பியான டி.ரவிகுமார் தனது குறுகிய கேள்வியாக, ''டோக்லாமில் ஜம்பேரி மேடு வரையிலான சீனப் படைகளின் குவிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததும் வடகிழக்கு மாநிலங்களுக்கான நுழைவாயிலாக உள்ளதுமான சிலிகுரி வழித்தடத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல். தேசிய பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நமது எல்லையைக் காக்க நமது அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?'' எனக் கேட்டிருந்தார்.

இதற்கு பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், ''இந்தத் தகவல் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த விஷயம் ரகசியம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் விழுப்புரம் தொகுதி எம்பியான டி.ரவிகுமார் கூறும்போது, ''சீன ராணுவம் நமது நாட்டுக்குள் நுழைந்து நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து உள்ளது. இத்துடன், தனது பல்லாயிரக்கணக்கான துருப்புகளையும் நிலைநிறுத்தி வைத்திருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த உண்மை நிலையை இந்திய ஒன்றிய அரசு தெரிவிக்க மறுப்பது அந்தச் செய்திகளை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT