இந்தியா

பயங்கரவாதி ஹபீஸ் சயீதை அரசின் தூதராக சந்திக்கவில்லை: பத்திரிகையாளர் விளக்கம்

செய்திப்பிரிவு

மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய ஹபீஸ் சயீதை, அரசின் தூதராக தாம் சந்திக்கவில்லை என்று பத்திரிகையாளர் வேத் பிரதாப் வைதிக் விளக்கம் அளித்துள்ளார்.

யோகா குரு ராம்தேவின் நெருக்கமான நண்பரும், பத்திரிகையாளருமான வேத் பிரதாப் வைதிக், பாகிஸ்தானில் தங்கியுள்ள பயங்கரவாதி ஹபீஸ் சயீதை சந்தித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கறுப்பு பண விவகாரம், ஊழல் தடுப்பு மசோதா உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த உண்ணாவிரதம் இருந்த யோகா குரு பாபா ராம்தேவின் நெருங்கிய நண்பரான வேத் பிரதாப் வைதிக் சமீபத்தில் பாகிஸ்தான் சென்றிருந்தார்.

அப்போது, லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சயீதை அவர் சந்தித்து பேசியுள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், காங்கிரஸ் இது குறித்து அரசு விளக்கம் தர வேண்டும் என்று கூறியது.

இந்த நிலையில், பயங்கரவாதி ஹபீஸ் சயீதுடனான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள பிரதாப் வைதிக், "இந்த சந்திப்புக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுவரை 100–க்கும் மேற்பட்ட பிரபகங்களை எனது தொழில் ரீதியாக சந்தித்து உள்ளேன். அத்தகையதுதான் ஹபீஸ் சையீதுடனான ஒரு மணி நேர சந்திப்பும்" என்றார்.

மேலும் அவர் கூறும்போது, " 'நரேந்திரமோடி மிகவும் ஆபத்தானவர். இப்படிப்பட்டவர் இந்திய பிரதமர் ஆகி இருக்கிறார். மோடி தெற்காசியாவுக்கே ஆபத்தானவர்' என்று ஹபீஸ் சயீத் ஏற்கனவே கூறியிருந்தார். அதுபற்றி அவரிடமே பேசும்போது, 'உங்கள் எண்ணம் மிகவும் தவறானது' என்று விளக்கிக் கூறினேன்" என்றார் பிரதாப் வைதிக்.

இதனிடையே, யோகா குரு ராம்தேவ் அளித்த பேட்டியில், "என் நண்பர் வைதிக், பத்திரிகையாளர் என்ற முறையில் சயீதை சந்தித்து உள்ளார். இதனை விமர்சிப்பது சரியல்ல. ஹபீஸ் சயீதின் மனதை மாற்றக் கூட, எனது நண்பர் வைதிக் முயற்சி செய்திருக்கலாம்" என்றார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ல் பயங்கரவாதிகள், மும்பையில் தாக்குல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக இருந்த தீவிரவாதி ஹபீஸ் சயீதை, வேத் பிரசாத் வைதிக் கடந்த 2-ஆம் தேதி சந்தித்து பேசியுள்ளார். இந்த விவகாரத்திற்கு அரசுக்கும் தொடர்புள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT