அசாதுதீன் ஓவைசி | கோப்புப்படம் 
இந்தியா

இந்திய ராணுவம் வலிமையானது, மோடி அரசாங்கம் பலவீனமானது - ஒவைசி விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: "இந்திய ராணுவம் வலிமையானது தான். ஆனால் பலவீனமான மோடி அரசு சீனாவைக் கண்டு அஞ்சுகிறது" என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.

அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு அருகே நடந்த இந்திய-சீன ராணுவ மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விவாதம் நடத்த மறுத்து வருகிறது. இதனை விமர்ச்சித்துள்ள ஓவைசி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "பிரதமர் மோடி அரசாங்கம், எல்லையில் யாரும் ஊடுருவவில்லை என்று கூறி நாட்டை தவறாக வழிநடத்தி வருகிறது. டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் சீன வீரர்கள் ஆக்கிரமித்து இருப்பதாக காட்டும் செயற்கைகோள் படங்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் தொடந்து நமது நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்போது நாம் தொடர்ந்து அவர்களுடன் வணிகம் செய்து கொண்டிருப்போமா?

சீன விவகாரத்தில் அரசாங்கத்தின் திட்டம் என்ன என்பதை அனைத்துக் கட்சி கூட்டத்தைக்கூட்டி அதில் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். நமது ராணுவம் வலிமையானதுதான். ஆனால் மோடி அரசாங்கம் பலவீனமானது. சீனாவுக்கு பயப்படுகிறது" என குறிப்பிட்டார்.

"இந்திய - சீன எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்த உண்மைகளை நரேந்திர மோடி அரசு மறைத்து வருகிறது. சீன ஆக்கிரமிப்புகள் குறித்த உண்மைகளைத் தெரிவிக்க ஏன் பயப்பட வேண்டும்? உண்மையை மறைப்பதில் பிரதமர் மோடி ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்" என்று கடந்த வியாழக்கிழமை ஓவைசி கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT