ரூ.500, 1000 நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்த பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து, நாடாளுமன்றத்தில் 11-வது நாளாக நேற்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அத்துடன் மேற்குவங்க முதல் வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சியினர் கடும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ஆனால், ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்ததில் இருந்து பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்து வருகிறார். ஆனால், நிதிஷ் குமார் அரசில் கூட்டணி வைத்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு இதுகுறித்து அமைதி காத்து வந்தார்.
இதனால் பிஹார் சட்டப் பேரவையில் ஆளும் கட்சியின ருக்கும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏ.க்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடந்தது.
இந்நிலையில், ‘‘500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த தற்கு நான் ஆதரவு தெரிவிக் கிறேன். ஆனால், அந்தத் திட்டத்தை சரியாக செயல்படுத்த வில்லை. அதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்’’ என்று கட்சி எம்எல்ஏ.க்களிடம் லாலு நேற்று முன்தினம் கூறியுள்ளார்.
முன்னதாக லாலு இல்லத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை முதல்வர் நிதிஷ்குமார் சென்றார். இருவரும் ஒரு மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர். அந்தக் கூட்டத்தில்தான், மோடி யின் நடவடிக்கைக்கு லாலு ஆதரவு தெரிவித்தார். எனினும் திட்டத்தை அமல்படுத்திய விதம் சரியில்லாததால் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.