இந்தியா

மக்கள் வரிசையில் காத்திருப்பது இதுவே கடைசியாக இருக்கும்: பிரதமர்

பிடிஐ

"கடந்த 70 ஆண்டுகளில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்துக்கிடந்துள்ளனர். இப்போது வங்கிகள் முன் அவர்கள் நிற்பதே கடைசி வரிசை. இது மற்ற வரிசைகளுக்கு முற்றிப் புள்ளி வைப்பதற்கான வரிசை" என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, "கடந்த 70 ஆண்டுகளில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்துக்கிடந்துள்ளனர். இப்போது வங்கிகள் முன் நிற்பதே கடைசி வரிசை. ஊழல், கறுப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் இனி மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்காக வரிசையில் காத்துக்கிடக்க தேவையிருக்காது.

ஊழல், ஏழை நடுத்தர மக்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டிருந்தது. நேர்மையானவர்கள் வங்கிகள் முன் வரிசையில் நிற்கிறார்கள். ஆனால், கறுப்புப்பணம் வைத்திருந்தவர்கள் அவற்றை ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்திவிட்டு பணத்தை வெள்ளையாக்கித் தருமாறு கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இது பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவு. இத்தகைய நடவடிக்கையை எடுத்ததால் நான் ஏதாவது பாவம் புரிந்துவிட்டேனா? ஆனால், எதிர்க்கட்சிகள் என்னை கடுமையாக விமர்சிக்கின்றன. நான் குறைந்த அளவு உடைமைகளைக் கொண்ட துறவி. என்னைப் போன்ற எளியோனை எதிராளிகள் என்ன செய்துவிட முடியும்?

ஜன் தன் கணக்குகளில் கறுப்புப்பணத்தை செலுத்தி சிலர் வெள்ளையாக்க முயல்வது எனக்குத் தெரியும். ஜன் தன் கணக்காளர்களிடம் நான் தாழ்மையாக வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அந்தப் பணத்தை அவர்களிடம் கொடுக்காதீர்கள். அப்படி செய்து பாருங்கள் அவர்கள் உங்கள் வீட்டை சுற்றி சுற்றி வருவார்கள். மீறியும் உங்களுக்கு அவர்கள் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்தால், "மோடிக்கு கடிதம் எழுதுவேன்" என்று எச்சரியுங்கள். ஜன் தன் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்காதீர்கள். அதை என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும். கறுப்புப் பணத்தை கைபற்றி உங்கள் பணத்தை உங்களிடம் சேர்ப்பேன்.

கறுப்புப் பண ஒழிப்பில் எனக்கு ஆதரவாக இருக்கும் மக்களின் இன்னல் போக்கப்படும். உங்கள் அனைவரது கைகளிலும் தொலைபேசி இருக்கிறது. அதையே நீங்கள் வங்கி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம். இந்தியர்களில் அதிகமானோர் கல்வியறிவு அற்றவர்கள் அவர்களிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை எப்படி ஊக்குவிக்க முடியும் என கேள்வி எழுப்பப்படுகிறது. அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் படிப்பறிவு குறைவாக இருப்பதாக விமர்சிக்கப்படும் நம் நாட்டில் வாக்குப்பதிவு மின்னணு முறையில் நடைபெறுகிறது. மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும் இன்னும் வாக்களிப்பது மின்னணு முறைக்கு மாறவில்லை என்பதே.

எனது தேசம், எனது தேசத்தின் ஏழை மக்கள் மாற்றத்துக்கு தயாராகவே இருக்கிறார்கள்" என்றார்.

SCROLL FOR NEXT