நூறு நாள் வேலை உறுதித் திட்டத்துக்கான ஊதிய உயர்வை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் கடந்த 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன்படி, கிராமப்புறங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு தலா 100 நாள் வேலை அளிப்பது உறுதி செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.82 ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி ரூ.119.42 வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்துக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக கர்நாடக பிராந்திய ராய்த்தா சங்கம் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி, 100 நாள் திட்ட பயனாளிகளுக்கு ரூ.119.42 வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டது.
மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நூறு நாள் வேலை திட்டத்தில் அந்தந்த பிராந்திய கூலி நிலவரத்தை அடிப்படையாக வைத்து சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படியே ஊதியம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச ஊதிய சட்டம் இத்திட்டத்துக்கு பொருந்தாது என்று வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த கர்நாடக உயர் நீதிமன்றம் மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து, ரூ.119.42 ஊதியம் வழங்க கடந்த 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இருதரப்பையும் விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்யாய, எஸ்.ஏ.பாப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து, 100 நாள் பயனாளிகளுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிலுவையுடன் வழங்க உத்தரவிட்டுள்ளது. நிலுவைத் தொகையை வழங்கத் தவறினால், பாதிக்கப்பட்ட சங்கத்தினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.