புதுடெல்லி: மக்களவையில் நேற்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய இணை அமைச்சர் அஜய் பட் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: லடாக் எல்லையில் 3,141 கி.மீ. தூரத்துக்கு 43 சாலைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் அருணாச்சல் எல்லையில் 3,097 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டன. அத்துடன் கடந்த அக்டோபர் 28-ம் தேதி 75 புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சாலைகள், பாலங்கள், ஹெலிபேட்கள் உட்பட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 13,525 கி.மீ. தொலைவு சாலைகளை எல்லை சாலை கட்டுமான நிறுவனம் (பிஆர்ஓ) பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
நாட்டின் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எளிதில் சென்று வர முடியாத எல்லை பகுதிகள், சர்வதேச எல்லை பகுதிகள் என மொத்தம் 16 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. இவ்வாறு இணை அமைச்சர் அஜய் பட் கூறியுள்ளார்.