கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் கன்னடத்தை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என சட்டப்பேரவை, சட்ட மேலவையில் தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.
கர்நாடக முதல்வர் முதல்வர் சித்தராமையா பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இது தொடர்பாக கூறியது: “எனது தலைமையிலான ஆட்சியிலும் நிர்வாகத்திலும் கன்னட மொழிக்கும்,கன்னட கலாச்சாரத்திற்கும் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் ஏறக்குறைய 98 சதவீத அரசுப் பணிகள் ஆட்சி மொழியான கன்னடத்தில்தான் நடைபெறுகின்றன.
ஆட்சி நிர்வாகம் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளையும் கன்னடத்திலே இருக்க வேண்டும் என்பதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது. கன்னட மொழி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் அரசுடன் கைகோர்த்து நிற்கின்றன” என்றார்.
இந்நிலையில் கர்நாடக சட்டப் பேரவையிலும்,சட்ட மேலவையிலும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் உயர் நீதிமன்றத்தில் கன்னடத்தை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கும்,மத்திய அரசிற்கும், கர்நாடக பொறுப்பு ஆளுநராக இருக்கும் ரோசய்யா விற்கும் அனுப்ப கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.