கர்நாடகாவில் தொழிலதிபரின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5.7 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ளன. மேலும் அதே வீட்டில் 28 கிலோ தங்கக் கட்டிகளும், 4 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பண மதிப்பு நீக்கத்தை தொடர்ந்து, கர்நாடகாவில் வருமான வரித் துறை சோதனை தீவிரமாக நடைபெற்று வருகி றது. மகளுக்கு ஆடம்பரத் திருமணம் செய்த, பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை கடந்த மாத இறுதியில் சோதனை நடத்தியது.
இந்நிலையில் கர்நாடகாவின் சித்ரதுர்கா, ஹூப்ளி மாவட்டங்களிலும் அண்டை மாநிலமான கோவாவிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், நகைக்கடை அதிபர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு சொந்தமான 15 இடங்களில் நடைபெற்ற சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் சித்ரதுர்கா மாவட்டம், செல்லகெரே என்ற இடத்தில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் சோதனை நடைபெற்றது. அவரது வீட்டில் சந்தேகத்துக்கிடமான கழிவறையை சோதித்தபோது, அதில் ரகசிய அறை இருப்பது தெரியவந்தது. அதில் ரூ.5.7 கோடி மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், ரூ.90 லட்சம் மதிப்புள்ள 100 ரூபாய் நோட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதே வீட்டிலிருந்து 28 கிலோ தங்கக் கட்டிகளும், 4 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவை தவிர, அவரது வீட்டிலிருந்து ரூ.8 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளின் ஆவணங்களும், 2 ஆடம்பர கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தத் தொழிலதிபருக்கு வேறு எங்காவது சொத்துகள் உள்ளனவா? சட்ட விரோதமாக புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கப்பட்டுள்ளனவா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
வருமான வரித் துறையின் பிடியில் சிக்கிய இந்தத் தொழிலதிபர் பெயர் கே.சி.விரேந்திரா என தகவல் வெளியாகியுள்ளது. இவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முக்கிய நிர்வாகியும், கன்னட திரைப்பட நடிகருமான தொட்டண்ணாவின் மருமகன் ஆவார்.