புதிய வரி மசோதா குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதையடுத்து கணக்கில் காட்டப்பட்ட பணத்தில் வாங்கிய தங்கம் உள்ளிட்ட நகைகளுக்கு வரி கிடையாது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
அதாவது பரம்பரை நகைகள் உட்பட தங்க நகைகள் மீது வரி உண்டு என்று வதந்திகள் பரவ, மத்திய அரசு விளக்கம் அளிக்கும் போது, “கணக்கில் காட்டப்பட்ட பணத்தில் வாங்கும் தங்கம் மற்றும் நகைகள், குடும்பத்தில் வழிவழியாக வந்த நகைகள் ஆகியவை ஏற்கெனவே உள்ள சட்டவிதிகளின் படியோ அல்லது தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டத்திருத்த விதிகளின் படியோ வரி கிடையாது என்று தெளிவுறுத்துகிறோம்” என்று அறிக்கை ஒன்றில் மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும், “சட்டபூர்வமாக எந்த அளவுக்கு நகை வைத்திருந்தாலும் அதற்கு வரி கிடையாது” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால் வரியை நிர்ணயிக்கும் அதிகாரியின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, “இது தொடர்பான அதிகாரி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் அந்தஸ்து, அதன் பாரம்பரியம், பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், அந்த குடும்பம் சார்ந்த சமூகப் பிரிவு மற்றும் சில விவரங்களை பரிசீலித்து அந்த குடும்பத்திற்குச் சொந்தமான பெரிய அளவிலான நகைகளை பறிமுதல் செய்வதா அல்லது இல்லையா என்பதை முடிவெடுக்கலாம். சோதனைக்கு உத்தரவிடும் வருமான வரி ஆணையர்/இயக்குநருக்கு சோதனை அறிக்கை அளிக்கும் போது இந்த விவரங்களை அளிக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதன்படி, வரும் டிசம்பர் 30-க்குள் கறுப்புப் பணம் பற்றி தாமாக முன்வந்து கணக்கு காட்டினால் அபராதம் உட்பட 50 சதவீதமும் கணக்கு காட்டாமல் சோதனையில் சிக்குவோருக்கு அபராதம் உட்பட 85 சதவீதமும் வரி விதிக்க முடியும்.
இதனிடையே, புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் மூதாதையர்கள் வழிவந்த நகைகள் உட்பட வீடு களில் உள்ள அனைத்து தங்க நகைகளுக்கும் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.
இதை மறுக்கும் வகையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரிச் சட்டங்கள் திருத்த மசோதாவில், வீடுகளில் தங்கம் அல்லது நகை வைத்திருப்பது தொடர்பாக எந்த மாற்றமும் செய்யவில்லை. ஏற்கெனவே இருந்த நடைமுறைகளே தொடரும்.
இதன்படி, வருமான வரித் துறை யிடம் கணக்கு காட்டிய வருமானம், விவசாய வருவாய் உள்ளிட்ட வரி விலக்கு அளிக்கப்பட்ட வருமானம், வீடுகளில் நியாயமாக சேர்த்து வைத் துள்ள பணம் ஆகியவை மூலம் வாங்கப்பட்ட தங்கம் அல்லது நகைகள் மற்றும் சட்டப்படி மூதாதை யர்கள் வழிவந்த நகைகளுக்கு வரி விதிக்கப்பட மாட்டாது.
எவ்வளவு வைத்திருக்கலாம்
கடந்த 1994-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், “திருமணமான பெண்கள் அதிகபட்சமாக தலா 500 கிராமும், திருமணமாகாத பெண்கள் தலா 250 கிராமும், ஆண்கள் தலா 100 கிராமும் நகைகள் வைத்திருந்தால் வருமான வரி சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட மாட்டாது” என கூறப்பட்டுள்ளது.