இந்தியா

பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சண்டிகார் மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி

பிடிஐ

சண்டிகார் மாநகராட்சித் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

சண்டிகார் மாநகராட்சியின் மொத்தமுள்ள 26 வார்டுகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 22 வார்டுகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளம் 4 வார்டுகளிலும் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் நேற்று வெளி யாகின.

இதில் பாஜக 20 வார்டுகளை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளம் 1 வார்டை மட்டும் கைப்பற்றியது.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் 4 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேச்சை வேட்பாளர் (பாஜக அதிருப்தி வேட்பாளர்) 1 வார்டில் வெற்றி பெற்றார்.

சண்டிகார் மாநகராட்சிக்கான கடந்த 3 தேர்தல்களிலும் காங் கிரஸ் பெரும்பான்மை பெற்று விளங்கியது. என்றாலும் இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.

1996-ல் சண்டிகார் மாநகராட்சி தோற்றுவிக்கப்பட்டது முதல், ஒரே கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது இதுவே முதல் முறையாகும்.

தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“பண மதிப்பு நீக்க நடவடிக் கைக்குப் பிறகு நாம் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம். முதலில் 5 மாநில இடைத்தேர்தலிலும் பிறகு தானே நகராட்சித் தேர்தல், ராஜஸ்தான் தேர்தல், குஜராத் தேர்தலிலும் வெற்றி பெற்றோம். தற்போது சண்டிகார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். பாஜகவை மக்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டதையே இது காட்டுகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் தலைநகராக விளங்கும் சண்டிகாரில் பஞ்சாபின் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் முன்னிலை

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 3-ம் கட்ட தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

SCROLL FOR NEXT